"நான் அப்படி நடந்திருக்கக்கூடாது; Sorry"- யூடியூபர் இர்பான்
ரம்ஜான் பண்டிகையின்போது மக்களுக்கு உதவி செய்கிறோம் எனக் கூறி காருக்குள் இருந்தவாறு இர்பானும், அவர் மனைவியும் நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் வீடியோ மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “பெரிய பெரிய தப்பு. நான் மன்னிப்பு கேட்கிறேன். உதவி செய்ய சென்ற இடத்தில் அப்படி நடந்திருக்கக்கூடாது. தப்பு என்பதை கண்டிப்பாக உணர்கிறேன். என்ன மாதிரியான சூழலாக இருந்தாலும் அப்படி ரியாக்ட் பண்ணி இருக்கக்கூடாது. வீடியோவை பார்த்த பிறகு நானே ஃபீல் பண்ணினேன். இல்லாதவர்களை பார்த்து சிரிக்கும் ஆள் நான் இல்லை. இது பற்றி நான் அன்றே பேசியிருந்தால் தவறாக சென்றிருக்கும் என்பதால் தற்போது விளக்கம் அளிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
அண்மை காலமாக சர்ச்சைக்கு பெயர் போன யூடியூபர் எனக் கூறப்படும் இர்பான், கடந்த ரம்ஜான் பண்டிகையின்போது சென்னை மவுண்ட் ரோட் சாலையோரத்தில் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உடை, உணவுகள் தானமாக வழங்கினார். இதுதொடர்பான காணொலியையும் அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், இர்பான் காரில் அமர்ந்தபடி பொருட்களை தானம் வழங்கியபோது, அதனை பெற்றவர்கள் போட்டிப்போட்டு காரின் உள் கைவிட்டதை எரிச்சலுடனும், தங்களை கையைப் பிடித்து இழுக்கிறார்கள் என்று சலிப்புடன் சொல்லி சிரித்ததாகவும், தானம் பெறும் சிறு குழந்தைகளை அதுங்க, இதுங்க என்று மரியாதைக் குறைவாகப் பேசியதாகவும் சர்ச்சைகள் கிளம்பின.