தூத்துக்குடியில் மின்னல் தாக்கி இளைஞர் பரிதாப பலி..!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இன்று மதியம் மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த சூழலில், கோரம்பள்ளம் பெரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் மதன்குமார் (24), மழைக்கு நடுவே வெளியே மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வரச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்னல் தாக்கியதில், உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் பெரியநாயகிபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மதன்குமார் (வயது 24). இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இன்று பெய்த மழையின்போது இவரது ஆடுகள் வீடு அருகே உள்ள சாலையில் மேய்ந்து கொண்டிருந்தன.
மழையில் சிக்கிய ஆடுகளை வீட்டுக்குள் பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக மதன்குமார் அவற்றைத் தேடிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு ஏற்பட்ட பயங்கர இடி, மின்னல் மதன்குமார் மீது தாக்கியது. இதில் அவர் அதே இடத்தில் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பலியான மதன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இடி மின்னல் தாக்கி இளம் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.