போலீஸ் தாக்கியதால் வாலிபர் தற்கொலை? திருச்சியில் பரபரப்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே போலீஸ் விசாரணைக்குச் சென்று வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி உறவினர்கள் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள பாளையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 22). கூலித் தொழிலாளியான இவருக்கு, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திவ்யா என்ற பெண்ணுடன் காதல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்ரீராம் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் காவல் துறையினர், ஸ்ரீராமின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ஸ்ரீராமின் தற்கொலைக்குக் காவல் துறையினரே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 20-ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில், ஸ்ரீராமின் வீட்டிற்குச் சென்ற வாத்தலை காவல் நிலைய போலீசார், விசாரணை என்ற பெயரில் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து ஸ்ரீராமை போலீசார் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் காயமடைந்து வீட்டிற்கு வந்த ஸ்ரீராம், வெளியில் எங்கும் செல்லாமல் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த மன உளைச்சல் காரணமாகவே அவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும், அவரது மரணத்திற்கு வாத்தலை காவல் நிலைய போலீசாரே காரணம் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். "விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று என் கணவரை போலீசார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்." போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீராமின் மனைவி, தாய் மற்றும் உறவினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மண்ணச்சநல்லூர் - எதுமலை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜீயாபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால், காவல் துறையினரின் பேச்சில் திருப்தியடையாத உறவினர்கள், அங்கிருந்து சென்று மீண்டும் நொச்சியம் அருகே உள்ள திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மண்ணச்சநல்லூர் போலீசார் மீண்டும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.