கோயம்பேட்டில் கார் ஏற்றி இளம்பெண் கொலை- மேலும் இருவர் கைது
சென்னை கோயம்பேட்டில் இளம்பெண்கள் மீது கார் ஏற்றி கொலை செய்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யான்சி (18) என்கிற இலங்கை தமிழ் பெண் சென்றுள்ளார். தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் சென்ற அவர், அங்குள்ள பாரில் நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. அப்போது நடனமாடுவதில் இவர்களுக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதையடுத்து, பாரில் இருந்த பவுன்சர்கள் இரு தரப்பினரையும் வெளியேற்றியுள்ளனர். ஆனால், வெளியே சென்ற பிறகும் அவர்களுக்கு இடையே சண்டை மூண்டுள்ளது. பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இருதரப்பினரையும் விலக்கிவிட்டு அவர்களை அங்கிருந்து அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, யான்சி மற்றும் அவரது 17 வயது தோழியும் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து சென்றுள்ளனர். அப்போது, எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் சென்ற கார் மீது யான்சி தரப்பினர் கல் எறிந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தங்களின் காரை வேகமாக ஓட்டிச் சென்று யான்சி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதினராம். இதில் யான்சி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு 17 வயது சிறுமி படுகாயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் நட்சத்திர பாரில் ஏற்பட்ட மோதலில், இளம் பெண் மீது காரை ஏற்றிப் படுகொலை செய்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலியில் பதுங்கியிருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான பாரதி மற்றும் தீனா பாண்டியன் ஆகிய இருவரை போலீசார் தேடி வந்த நிலையில், திருநெல்வேலியில் பதுங்கியிருந்த இருவரும் பிடிப்பட்டுள்ளனர்.