4 வருட காதல், 2 நாட்களில் காதலனுடன் திருமணம்- இன்று இளம்பெண் தற்கொலை
பவானி அருகே வருகிற திங்களன்று காதலனுடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள எலவமலை ஊராட்சிக்கு உட்பட்ட விருமாண்டம் பாளையம் பகுதியில் சேர்ந்தவர்கள் முனியப்பன்- மாரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் மூன்று பேருக்கு திருமணம் ஆகிய நிலையில் கடைசி மகளான நிர்மலா (23) பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மாரிகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்ற இளைஞரும், இளம் பெண் நிர்மலாவும் என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் வரும் திங்கள் அன்று எல்லப்பாளையம் ஸ்ரீ வீரனார் கோவிலில் திருமணம் நடைபெற்று, வரவேற்பு விழா ஜம்பை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது.
திருமண வேலை காரணமாக நிர்மலாவின் தந்தை முனியப்பன் மற்றும் தாயார் மாரியம்மாள் நேற்று மதியம் மகளை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு அந்தியூருக்கு சென்றதாக கூறப்படுகிறது. மீண்டும் மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த மகள் நிர்மலா வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ந்து இது குறித்து சித்தோடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மட்டுமின்றி உயிர் இழப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அவர் தன்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் குடும்பத்தார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.