திருமணமான 5 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
தேனி மாவட்டம் கூடலூர் அருகே திருமணமான 5 நாட்களில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியில் திருமணமான ஐந்தே நாட்களில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்த சந்திரன் - காயத்ரி தம்பதியினரின் மகள் ஜெயஸ்ரீ (18). இவருக்கும், காயத்ரியின் தம்பியான முத்தீஸ்வரன் என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று பிற்பகல் ஜெயஸ்ரீ தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த கூடலூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயஸ்ரீயின் உடலைக் கைப்பற்றினர். பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், ஜெயஸ்ரீயின் தந்தை சந்திரன் மற்றும் கணவர் முத்தீஸ்வரன் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஐந்தே நாட்களில் இளம்பெண் உயிரிழந்துள்ளதால், சட்ட விதிமுறைப்படி உத்தமபாளையம் கோட்டாட்சியர் (RDO) நாளை இந்த மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த உள்ளார்.