×

இளைஞர்களே உஷார்..! வாடகை காதலன் என்ற பெயரில் புது வகை மோசடி..!  

 

கவர்ச்சியான ஆண்களின் புகைப்படத்துடன், சலுகை விலையில் வாடகை காதலன் வேண்டுமா? என்ற விளம்பரம் சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி கொண்டிருக்கிறது. ஒரு மணி நேரம் ஜோடியாக காபி அருந்துவதற்கு ரூ.499, சினிமாவுக்கு செல்ல ரூ.1,249 என்று ஆரம்பித்து வெவ்வேறு வகையான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 1ம் தேதியொட்டி 50 சதவீத தள்ளுபடி விலையில் இந்த ஆபர் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் டிரெண்டான நிலையில், சைபர் கிரைம் ஆசாமிகள் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் இதனை நம்பிச் செல்ல வேண்டாம் என்று ஹைதராபாத் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கை; காதலன் வாடகைக்கு என்று வந்துள்ள சமூக வலைத்தள விளம்பரங்கள் சைபர் குற்றவாளிகளின் கைவரிசை. மோசடியான இந்த விளம்பரங்களை யாரும் நம்ப கூடாது. ஆன்லைன் உரையாடல்களை நம்பி, முன்பின் தெரியாதவர்களை நேரடியாகச் சந்திக்கச் சென்றால், அவர்கள் உங்களை எளிதில் சிக்க வைக்கும் அபாயம் உள்ளது. காதல் என்ற பெயரில் பொய் சொல்லி ஏமாற்றுவதற்குப் பல வாய்ப்புகள் உள்ளன.

அரட்டையின் போது தந்திரமாகச் சேகரிக்கப்பட்ட தொலைபேசி எண்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில் மிரட்டிப் பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இதற்குப் பொறுப்பானவர்கள் விரைவாக விசாரிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக, சிறுமிகளுடன் அவர்களது பெற்றோரும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். அவர்களது குழந்தைகள் சமூக ஊடகங்களில் என்ன மாதிரியான பதிவுகளைப் பார்க்கிறார்கள்? அவர்கள் யாரிடம் பேசுகிறார்கள்? வெளியே செல்லும்போது யாரைச் சந்திக்கிறார்கள்? பெற்றோர்கள் இந்த விஷயங்களைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் மீது முறையான மேற்பார்வை இல்லாவிட்டால், அப்பாவி குழந்தைகள் மோசடிக்காரர்களின் வலையில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுபோன்ற இணையவழி மோசடியாளர்களிடம் யாரேனும் சிக்கினாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான பதிவுகளைக் கண்டாலோ, பீதியடையாமல் உடனடியாக 1930 என்ற இணையக் குற்ற உதவி எண்ணை அழைக்கவும் அல்லது cybercrime.gov.inஎன்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்,

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.