×

நீச்சல் குளத்தில் மூச்சு திணறி உயிரிழந்த இளைஞர்! துக்கம் தாங்காமல் மாமாவும் மாரடைப்பால் பலி

 

ராமநாதபுரம் அரியமான் பீச் அருகே உள்ள நீச்சல் குளத்திற்கு சுற்றுலா வந்தவர் நீச்சல் குளத்தில் இறங்கிய போது மூச்சு திணறி உயிரிழந்தார். அவரை மீட்டு மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தவரின் மாமா துக்கம் தாங்காமல் மாரடைப்பால் உயிரிழந்த நிகழ்வு ராமநாதபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (28). இவரது மனைவி கௌசல்யா (26). இவர்கள் இருவரும் அவர்களது நண்பர்களுடன் 20 பேர் கொண்ட குழு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் உள்ள கௌசல்யாவின் சித்தப்பா ஆனந்த குமார் (40) வீட்டுக்கு கோடை விடுமுறையொட்டி ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரத்தை சுற்றி இருக்கக்கூடிய சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக வந்துள்ளனர். சென்னையில் இருந்து வந்த கௌசல்யா யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை தேவிபட்டினம், காரங்காடு உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சென்று பார்வையிட்டு மீண்டும் இன்று காலை யுவராஜ் கௌசல்யா மற்றும் கௌசல்யாவின் சித்தப்பா ஆனந்தகுமார் அவரது நண்பர்கள் என இருவருக்கும் மேற்பட்டோர் வேனில் ராமேஸ்வரம் வந்து தனுஷ்கோடி, அப்துல் கலாம் நினைவகம், உள்ளிட்ட சுற்றுலா தளங்களை பார்வையிட்டு விட்டு மாலை சுமார் 5 மணி அளவில் உச்சிப்புளி அடுத்துள்ள அரியமான் குஷி பீச்சுக்கு சென்றுள்ளனர். 

குஷி பீச்சுக்கு சென்றவர்கள் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துள்ளனர். அப்போது கௌசல்யாவின் கணவர் யுவராஜ்  நீச்சல் குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு நீச்சல் குளத்தை விட்டு வெளியே அழைத்து வந்த ஒரு சில நொடிகளில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து யுவராஜை  அவரது மாமா ஆனந்தகுமார் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள உச்சிப்புளி அரசு மருத்துவமனை அழைத்து சென்ற போது செல்லும் வழியில் ஆனந்த குமாருக்கு வலிப்பு ஏற்பட்டு மாரடைப்பால் அவரும் ஆட்டோவிலே உயிரிழந்தார் இருவரையும்  பரிசோதித்த உச்சிப்புளி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். பின்னர் இருவரது உடலும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவத்தில்  யுவராஜ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், ஆனந்தகுமார் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாகவும் இரு வேறு வழக்குகளை உச்சிப்புளி  போலீசாரர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில்  நீச்சல் குளத்தில் குளித்த மருமகன்  மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம் தாங்காமல் மாமாவும் மாரடைப்பால் உயிரிழந்த நிகழ்வு ராமநாதபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் வந்த இரு உடல்களையும் பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது அங்கு இருப்பவர்களின் கண்களை குளமாக்கியது.