திருமணமான 4 மாதங்களில் சிதைந்த பெண்ணின் கனவு! வேலூரில் சோகம்
காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று விபத்தில் சிக்கிய புதுமண தம்பதியில் இளம்பெண் உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் கருகம்புத்தூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் - மகேஸ்வரி தம்பதியினரின் மூன்றாவது மகள் நர்மதா (24). இவருக்கும் சென்னையை சேர்ந்த ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் திருவேங்கடம் (27)என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதியினர் இருவரும் கடந்த 21ம் தேதி சென்னையில் இருந்து ராணிப்பேட்டையில் நடைபெறும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது காஞ்சிபுரம் அருகே சரக்கு வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் திருவேங்கடத்திற்கு காலில் எலும்பு முறிவும், நர்மதாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நர்மதா நேற்று (24-03-2026) மூளை சாவு அடைந்துள்ளார். இந்நிலையில் புதுமண பெண்ணின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் முன் வந்ததை அடுத்து நர்மதாவின் இதயம், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து உடல் உறுப்பு தானம் செய்த புதுமண பெண்ணின் உடல் சொந்த ஊரான வேலூர் கருகம்புத்தூரில் வைக்கப்பட்டதை அடுத்து அவரது உடலுக்கு வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் அரசு மரியாதை செலுத்தினார்.