அவசியம் தெரிஞ்சுக்கோங்க! காலை வெறும் வயிற்றில் டீ குடித்தால்...
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் பலருக்கு உள்ள நிலையில், அது செரிமான பிரச்சினைகளை உண்டாக்கும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். வெறும் வயிற்றில் டீ அருந்துவது அசிடிட்டி மற்றும் வாயு தொல்லையை அதிகரிப்பதுடன், செரிமான மண்டலத்தின் இயல்பு தன்மையையும் சீர்குலைக்கக்கூடும். மேலும், டீயில் உள்ள 'டானின்கள்' நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதைத் தடுப்பதால், உணவு உண்ட உடனே டீ குடிப்பதைத் தவிர்த்து முறையான இடைவெளி விட்டு அருந்துவதே உடலுக்கு நல்லது.
‘அப்போ டீ, காபியே காலை குடிக்கக்கூடாதா’ என கேட்கலாம். அப்படியல்ல. ஒரு சில மாற்றங்களை செய்து கொண்டால் போதும். அது என்னென்ன, வெறும் வயிற்றில் டீ குடித்தால் உடலில் என்ன நடக்கும், டீ - காபி குடிக்கும் நேரத்தை சிறிது மாற்றுவதன் மூலம் இந்த அசௌகரியங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம். முதலில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் உடலில் என்னென்ன நடக்குமென பார்க்கலாம்.
1) வெறும் வயிற்றில் டீ, காபி குடிக்கும் போது டீயில் உள்ள கஃபைன், தியோஃபிலின் மற்றும் டானின்கள் போன்ற சேர்மங்கள் வயிற்றில் அமிலச் சுரப்பை அதிகரிக்கலாம்.
2) அதேபோல வெறும் வயிற்றில் டீ குடிக்கும்போது, உடலில் அமிலத்தன்மை அதிகரித்து அது வயிற்றின் உட்புறப் பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தி, நெஞ்செரிச்சல், ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது வயிற்றில் எரியும் உணர்வு ஏற்படக்கூடும்.
3) டீயில் உள்ள டானின்கள் செரிமான நொதிகளுடன் இணைந்து, செரிமான செயல்முறையில் பிரச்சனையை கொடுக்கலாம். இதனால் காலையில் குமட்டல், வயிறு உப்புசம் அல்லது வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
4) டீயில் உள்ள அதிக அளவிலான டானின்கள் மற்றும் பைட்டேட்டுகள், குறிப்பாக இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கலாம்.
5) பல மணி நேர தூக்கத்திற்குப் பிறகு உடலில் இயற்கையாகவே நீர்ச்சத்து குறைந்திருக்கும். அத்துடன் கஃபைன் லேசான டையூரெடிக் தன்மையும் கொண்டிருக்கும் என்பதால், வெறும் வயிற்றில் டீ குடிப்பது உடலில் நீர்ச்சத்து மேலும் குறைவதற்கு வழிவகுக்கும்.
அதற்காக காலையில் டீ குடிப்பதை முழுமையாகத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. டீ குடிக்கும் நேரத்தையும், தயாரிக்கும் முறையையும் சற்று மாற்றினாலே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தலாம். அவை என்னென்ன என இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
1) முதலில் நீர்ச்சத்தை ஈடுசெய்யுங்கள்: எழுந்தவுடன் 1–2 கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கலாம். இது உடலுக்கு நீர்ச்சத்தை வழங்க உதவும்.
2) லேசான உணவை எடுத்துக்கொள்ளுங்கள்: முதல் டீயை குடிப்பதற்கு முன் ஊறவைத்த பாதாம், வாழைப்பழம் அல்லது பிஸ்கட் போன்ற லேசான உணவை சாப்பிடலாம். இது வயிற்றில் அமிலத்தால் ஏற்படும் எரிச்சலைக் குறைக்க உதவும். குறைந்தபட்சம் தண்ணீராவது குடியுங்கள்.
3) 30–45 நிமிடங்கள் காத்திருக்கலாம்: எழுந்தவுடன் உடனடியாக கஃபைன் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, உடல் இயல்பாக விழித்துக்கொள்ள 30–45 நிமிடங்கள் அவகாசம் கொடுத்து அதன் பிறகு டீ குடிக்கலாம்.
4) முதலில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து, சிறிதளவு உணவு எடுத்துக்கொண்ட பிறகு உங்களுக்கு பிடித்த டீயை ரசித்துக் குடிக்கலாம். இதன் மூலம் தேவையற்ற அசௌகரியங்களைத் தவிர்க்கலாம்.