ஒரே மாசத்துல சட்டம் ஒழுங்க மாத்த முடியாது... ஆனா மாற்றம் நிச்சயம்..! - எம்.எல்.ஏ காமராஜ் பேச்சு!
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதாத விவாதத்தில் பேசிய எம்.எல்.ஏ காமராஜ், “முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற பிறகு, ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே இருந்த பிளவு நீங்கி, நட்பும் புரிந்துணர்வும் நிலவும் சூழல் உருவாகியுள்ளது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறையை முதலமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார். இதுவே நல்லாட்சி நடத்துவதற்கான சரியான வழியாகும். இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்ற மக்களின் எண்ணத்தை நனவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றார். தொடர்ந்து, தனது தொகுதிக்கான கோரிக்கைகளை முன்வைத்தார்.
மேலும், “சட்டம் - ஒழுங்கு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஓரிரு மாதங்களில் அனைத்தையும் மாற்ற முடியாது. காவல்துறையை மக்களின் நண்பர்களாக மாற்றும் நோக்கில் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் தடுப்புக்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சட்டம்-ஒழுங்கு மேலும் வலுப்பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இருமொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது. மாநிலத்தின் நிதிச் சுமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கனிம வளங்களின் வருவாயை இரட்டிப்பாக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது” என்று கூறினார். மேலும், இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
மேகதாது பிரச்சினை குறித்து பேசிய காமராஜ், “மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக செயல்படுகின்றன. அதுபோல தமிழ்நாட்டிலும் அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.