இன்று மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தை இலவசமாக பார்க்கலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
99-வது கலங்கரை விளக்க தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் இன்று (செப்.21) ஒரு நாள் மட்டும் இலவசமாக கண்டு களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு சலுகையின் மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் எந்தவித நுழைவு கட்டணமும் இன்றி கலங்கரை விளக்கத்தை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பு சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரத்தின் மைய பகுதியில் உள்ள நீளமான பாறை மீது 135 ஆண்டு பழமை வாய்ந்த கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இது, 84 அடி உயரத்தில் 93 படிக்கட்டுகளுடன் ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில், 1887ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. வங்கக்கடலில், பயணம் செய்யும் கப்பல்கள் மற்றும் படகுகள் இந்த வெளிச்சத்தை அறிந்து விலகிச் செல்லவும், கப்பல் மாலுமிகளுக்கு அடையாளம் காட்டவும் இந்த கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இந்த, கலங்கரை விளக்கம் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆண்டுதோறும், செப்டம்பர் 21ம் தேதி (இன்று) நாடு முழுவதும் கலங்கரை விளக்க தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, இன்று ஒரு நாள் மட்டும் மாமல்லபுரம் கலங்கரை விளக்கம், அருங்காட்சியகத்தை இலவசமாக சுற்றிப் பார்க்கலாம்