வருஷத்துக்கே 5 நாள் தான் போக முடியும்! கோவையின் ரகசிய ஆன்மீக ட்ரெக்கிங் ஸ்பாட் பற்றி தெரியுமா..?
தமிழ்நாட்டில் ஆன்மீக பயணமாக மலை கடந்து பெருமாளை தரிசனம் செய்யும் இடமாக பெருமாள் முடி கோயில் உள்ளது. இங்கு செல்ல வருடத்திற்கு 5 சனிக்கிழமைகள் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. குறிப்பாக புரட்டாசி மாதம் என்றால் அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்று சுயம்பு வடிவில் உள்ள பெருமாளை சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம்.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5,300 அடி உயரத்தில், அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள இக்கோயிலுக்குச் செல்ல ஆண்டுக்கு வெறும் 5 சனிக்கிழமைகள் மட்டுமே வனத்துறையால் அனுமதி வழங்கப்படுகிறது.
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலையிலேயே மாங்கரை வனச் சோதனைச் சாவடிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதால், வனத்துறையினர் பாதுகாப்பு கருதி காலை 7 மணிக்கு பிறகே வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி அளித்தனர்.
சேம்புக்கரையிலிருந்து தொடங்கும் ஒத்தையடிப் பாதையில் அமைந்துள்ள விநாயகரை வழிபட்ட பின் பக்தர்கள் தங்கள் மலையேற்றத்தைத் தொடங்குகின்றனர். ஆரம்பத்தில் மண் பாதையாகத் தொடங்கி, மேலே செல்லச் செல்லப் பாறைகள் நிறைந்த செங்குத்தான பாதையாக மாறுகிறது.
சுமார் 1.5 மணி நேரக் கடினமான மலையேற்றத்திற்குப் பிறகு, 'கிரி மலை' எனப்படும் கடைசி மலையை அடையும் போது, சுமார் 40 அடி உயரமுள்ள பிரம்மாண்ட பாறையில் திருநாமம் வரையப்பட்டு, சுற்றிலும் வேல்கள் நடப்பட்ட சுயம்பு வடிவிலான பெருமாளைத் தரிசிக்க முடியும். அங்கு பக்தர்கள் பால், பன்னீர் அபிஷேகம் செய்து "கோவிந்தா... கோவிந்தா..." என்ற பக்திக் கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சுற்றி பசுமையான சூழல், குளுகுளு காற்று மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கு இடையே அமர்ந்துள்ள இச்சுயம்பு பெருமாளைத் தரிசிப்பது ஆன்மீக அமைதியோடு மனதிற்குப் புத்துணர்ச்சியையும் அளிப்பதாக பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.