நாளை முதல் மதுவை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்- டாஸ்மாக் புதிய திட்டம்
தமிழ்நாட்டில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நோக்கத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை தவெக அரசு நாளை அறிமுகப்படுத்தவுள்ளது.
டாஸ்மாக் நிறுவனம் https://tasmace2e.in/ இணையதளம் மூலம் மதுபானங்களை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. டாஸ்மாக் கடைகளில் கிடைக்கும் மதுவகைகள் மற்றும் அவற்றின் விலையை அறிந்து முன்பதிவு செய்யலாம். வீட்டிலிருந்தபடி பணம் செலுத்திய பிறகு, QR குறியீட்டுடன் கூடிய ரசீதும், சம்பந்தப்பட்ட கடைக்கான வழிகாட்டி வரைபடமும் வழங்கப்படும். முன்பதிவு செய்த கடையில் QR குறியீட்டு ரசீதை காட்டி மதுபானத்தை பெற்று கொள்ளலாம். வரிசையில் காத்திருப்பதை குறைக்கவும், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனையை தடுக்கவும் அறிமுகம் என டாஸ்மாக் விளக்கம்.
இதனிடையே டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் சமூகத்திற்கு ஆபத்தானது என்றும், இந்தத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.