“யோகா தனிமனித வளர்ச்சிக்கும் சிறந்த வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் வழிகாட்டும்”- ஆளுநர் அர்லேகர்
யோகா தினத்தையொட்டி கோவையில் யோகாசனம் செய்தார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்.
இதுகுறித்து ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரில் நடைபெற்ற 12-வது சர்வதேச யோகா தின விழாவில் #IDY2026 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பங்கேற்று, அவர்களுடன் இணைந்து முக்கிய யோகாசனங்களைப் பயிற்சி செய்து, அன்றாட வாழ்வில் யோகாவின் முக்கியத்துவம் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். இந்தியாவின் காலத்தால் அழியாத மனிதகுலத்திற்கான கொடையான யோகம், தமிழகத்தின் புனித மண்ணில் பிறந்த மகரிஷி பதஞ்சலியின் ஆழ்ந்த ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்று உலகளவில் உடல் ஆரோக்கியம், மன அமைதி மற்றும் முழுமையான நல்வாழ்வை மேம்படுத்தும் மகத்தான இயக்கமாக யோகம் திகழ்கிறது. ஆரோக்கியமான உடல், அமைதியான மனம் மற்றும் சமநிலையான வாழ்க்கையைப் பெற, இளைஞர்கள் உட்பட தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் யோகாவை வாழ்நாள் முழுவதும் தொடரும் ஓர் உன்னதப் பயிற்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது தனிமனித வளர்ச்சிக்கும் சிறந்த வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் வழிகாட்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.