நேற்று சாவுக்கு காரணமானவர்... இன்று என்னை துறையூர் எம்.எல்.ஏ. தாக்கினாரா?.. வினோத விளக்கம் அளித்த கார்த்திக்..!
துறையூர் தவெக எம்எல்ஏ-வும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் தன்னைத் தாக்கிவிட்டதாகவும், தனது சாவுக்கு அவரே காரணம் எனவும் மருத்துவமனையில் படுத்து வீடியோ வெளியிட்ட கார்த்திக் என்ற நபர், காலையில் அவருடனேயே அமர்ந்து விளக்கம் அளித்துள்ளார். நேற்றிரவு தாக்குதல் வீடியோ வைரலான நிலையில், காலையில் ரவிசங்கர் அருகிலேயே அமர்ந்துகொண்டு, கூட்ட நெரிசலால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவை வைத்துத் தவறாகப் பரப்புவதாகக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில்,
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து புகார் அளிக்க வந்த நபரை, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தரக்குறைவாக பேசியதோடு, அந்த நபர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியிருக்கும் துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான ரவிசங்கரின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தன்னை சந்திக்க வந்த நபரை துணை சபாநாயகர் அடித்து விரட்டிய வீடியோவும், அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் எதிர்ப்பு கிளம்பிய பின்னர், அவரை வைத்து விளக்க வீடியோ வெளியிட்டிருப்பது வேடிக்கையின் உச்சம்.
விஜய்க்காக ஓட்டு போட்டவன் என பலமுறை பாதிக்கப்பட்ட நபர் சொன்ன பின்பும், அவரை ரவி சங்கர் கண்மூடித்தனமாக தாக்கியிருப்பதை பார்க்கும் போது அவருக்கு கோபம் தனக்கு வாக்களித்தவர் மீதா? அல்லது ஏதோ தனது ஆசையை விஜய் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதால் அவர் மீது ஏற்பட்ட கோபமா? என்ற சந்தேகமே எழுகிறது.
மக்களோடு மக்களாக நிற்பவர்களைத் தான் வேட்பாளர்களாக தானே தேர்ந்தெடுத்திருப்பதாக வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், அவர் தேர்ந்தெடுத்த லட்சணம் இது தான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்வாரா?
எனவே, தொகுதி பிரச்னையை கூற வந்த நபரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்திய துணை சபாநாயகர் ரவி சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் பிரநிதிநிதிகள் ஆளப்பிறந்தவர்கள் அல்ல மக்களுக்காக பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.