கோவையில் அமைகிறதா உலகின் மிக உயரமான முருகர் சிலை..? அக்.10ல் தெரியும்..!
ஆசியாவிலேயே மிக உயர முருகர் சிலை கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலையில் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இந்த ஆண்டு துவக்கத்தில் அறிவித்தார்.
மருதமலை அடிவாரத்தில் இருந்து சுமார் 180-185 அடி உயரம் கொண்டதாக அமையவுள்ள இந்த சிலை ஆசியாவில் மட்டும் அல்ல, உலகிலேயே மிக பெரிய முருகர் சிலையாக இருக்கும். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.146.83 கோடி எனவும் இதில் சிலை மட்டும் ரூ.110 கோடியில் அமையும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த திட்டத்தில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பிற பொது அடிப்படை வசதிகளும் அடங்கும்.
இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் சமீபத்தில் துவங்கியது. சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் வெளிவந்த தகவல் அடிப்படையில் சிலையை நிறுவ பேருந்து நிலையத்திற்கு பின் பகுதியில் காலியாக உள்ள 2.5 ஏக்கர் நிலம் தேர்வாகி உள்ளது எனவும், திட்டத்திற்கு கூடுதல் நிலம் தேவைப்படலாம் என்பதால் அதற்கு பக்கத்தில் வரும் 2.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த, விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் தாக்கல் செய்த மனு:
யானைகள் வழித்தடமான மருதமலை, சுற்றுச்சூழல் ரீதியாக, முக்கியமான பகுதியாகும். நீலகிரி வனப்பகுதியில் இருந்து, பிற வனப்பகுதிகளுக்கு செல்ல, யானைகள் இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன.
இந்த பகுதியில், 184 அடி உயரத்துக்கு, முருகன் சிலை அமைக்க வேண்டுமானால், வனங்களை அழிக்க வேண்டி உள்ளது. இது யானைகளின் போக்குவரத்தை துண்டிக்கும். அதுமட்டுமின்றி, விலங்குகள்-, மனித மோதல்கள் அதிகரிக்கும்.
மேலும், முருகன் சிலை அமைக்க, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை ஒப்புதல் பெறப்படவில்லை. எனவே, முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கர வர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, மனுவுக்கு பதில் அளிக்கும்படி, ஹிந்து அறநிலையத்துறைக்கு உத்தர விட்டு, விசாரணையை அக்., 10ம் தேதிக்கு தள்ளி வைத்தது.