டிச.28 வரை 'பராசக்தி' கண்காட்சி நீட்டிப்பு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி பட குழுவினரால் 1960 காலகட்டத்தில் இருந்த வீடு, டென்ட் கொட்டாய், மொழிப்போர் தியாகிகளின் புகைப்படங்கள், ரயில் நிலையம், காவல் நிலையம், படத்தில் பயன்படுத்தப்பட்ட கார், 90 காலகட்ட சிற்றுண்டிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செட் அமைத்து World of பராசக்தி என்ற பெயரில் கண்காட்சி கடந்த டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கப்பட்டது.
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஸ்ரீ லீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் திட்டமிடப்பட்டு, மக்களுக்கு இலவச அனுமதியுடன் பட குழு இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் மக்களின் அதிகப்படியான வரவேற்பினால் டிசம்பர் 25ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் மூன்று நாட்கள் நீட்டித்து, வருகின்ற 28ஆம் தேதி வரை கண்காட்சி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை தினம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று, வள்ளுவர் கோட்டத்தையும், அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த கண்காட்சியையும் பார்த்து 60கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 60களில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை இந்த கண்காட்சி கண் முன் நிறுத்தியதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.