×

#BREAKING மதுரையில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து தொழிலாளிகள் பலி

 

மதுரை சிலைமான் அருகே மண்டபம் கட்டும் பணியில் ஈடுபட்ட இரு பெண் தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியில் தங்கராசு என்பவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் கட்டும் பணி சில நாட்களாக  நடைபெற்றுவந்துள்ளது. மண்டபத்தின் கீழ்த்தளத்திற்காக 20 அடி அளவிற்கு பள்ளம் தோண்டப்பட்டு தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இன்று பணிக்கு வந்த சிவகங்கை மாவட்டம் மணலூர் கிழக்கு சிலைமான் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி(46) என்ற பெண்ணும்  சிலைமான் அருகே உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த தமிழரசி(60) என்ற மூதாட்டி உள்ளிட்ட தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். தனலட்சுமி மற்றும் தமிழரசி இருவரும் மதிய உணவு முடித்துவிட்டு கட்டிடப் பணியில் ஈடுபடுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகே நடந்து சென்ற போது திடீரென  மண் சரிந்து பள்ளத்திற்குள் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இருவர் மீதும் மண் விழுந்த மூடிய நிலையில் இருவரும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிலைமான் காவல்துறையினர் மற்றும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மண்ணை வெளியேற்றி தனலெட்சுமியின் உடலை மீட்டனர். ஆனால்  தமிழரசியின் உடலை மீட்பதில் கடும் சவால் ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் மண்ணை தோண்டி தமிழரசியின் உடலை கயிறுமூலமாக கட்டி மீட்டனர்.  தமிழரசியின் மகள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் தனது தாயாரின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மண் சரிவில் சிக்கி உயிரிழந்த இரு பெண் தொழிலாளர்களின்  உடல் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராயவிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் உள்ளிட்டவைகள் குறித்து சிலைமான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.