×

மகளிர் உரிமைத் தொகை: இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகம்..!!

 

தமிழகத்தில் இன்று முதல் தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 1.15 கோடி பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற்று வருகின்றனர்.  இந்தத் திட்டத்தின் கீழ் விடுபட்ட பெண்கள், அடுத்த மாதம் 15ம் தேதி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  அதன்படி இன்று முஹ்ட்ல விண்ணப்பங்கள் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

மூன்று மாதங்களுக்கு நடைபெறவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ்  சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுவார்கள் என்றும், இவர்கள் மூலம் விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய பெண்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில்,  புதிதாக  பயனாளிகளாக இணைய பல்வேறு நிபந்தனைகள் இருந்து வருகிறது. அதில் குறிப்பிட்ட 3  நிபந்தனைகளை தளர்த்தி தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. 


 
 அதன்படி,  “பல்வேறு அரசு துறைகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று பணியாற்றி, தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதிவாய்ந்த பெண்கள், இந்த திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
 
அரசு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

 இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், ஆதரவற்ற-கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் இத்திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்” என்று  அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தளர்வுகள் மூலம் புதிதாக பலர்  விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.