×

மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி - தமிழக அரசு அரசாணை வெளியீடு

 

 மகளிர் சுய உதவிக்குழுவினர் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 2,756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது .

அதில், கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இப்போது அந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதில் கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் எனவும்,  இந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை உள்ள நிலுவை தொகையில் அபராத வட்டி மற்றும் இதர செலவீனங்கள் உள்பட  அசல் தொகையான 2, 459 கோடியே 50 லட்சம் ரூபாயும்,  வட்டி தொகையான 215 கோடியே 7 லட்சம் ரூபாயும் என மொத்தம் 2,755 கோடியே 89  லட்சம் ரூபாயை தள்ளுபடி செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதே சமயம் தமிழக அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை அளிப்பவர்கள் கடன் தள்ளுபடி தகுதி உடையவர்கள் என்றும் தரவுகள் சரியாக இல்லாத கடன்களுக்கு இத்திட்டம் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டில் முதல் கட்டமாக ரூபாய் 600 கோடி விடுவிக்கப்படுகிறது என்றும் மீதமுள்ள தொகை 7 சதவீத வட்டியுடன் அடுத்த நான்கு ஆண்டுகளில் நிபந்தனையுடன் விடுவிக்க அனுமதிக்கப்படுகிறது எனறும் அரசாணையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.