பெண்கள் அதிக தங்க நகைகள் அனிய தடை... அணிந்தால் ரூ.50,000 அபராதம்!
தங்க நகைகள் என்றாலே பெண்களுக்கு மகிழ்ச்சியும், ஆசையும்தான். அதிலும் திருமண வைபவத்தின்போது, ஏராளமான நகைகளை அணிவதில் பிரியப்படுவார்கள்.. ஆனால், உத்தரகாண்ட் மாநிலத்தில் திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் திருமணமான பெண்கள், தங்க நகைகள் அணிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன..
நகை வாங்க முடியாமல் இருப்பவர்களின் சங்கடத்தை தீர்க்கதான், வித்தியாசமான இந்த உத்தரவை உத்தரகாண்டில், சக்ராதா என்கிற கிராமத்தின் பஞ்சயாத்தில் பெரியவர்கள் வழங்கி இருக்கின்றனர்.
இதன்படி, பெண்கள் வெளியில் வரும் போது தாலி, மூக்குத்தி, கம்மல் தவிர வேறு எதையும் அணியக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தவிர்த்த வேறு நகைகள் எதையாவது வெளியில் வரும் போது அணிந்தால், அவர்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.அதிக தங்க நகைகளை அணிந்தால், அபராதம் என்கிற உத்தரவு, அந்த கிராம மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த உத்தரகாண்ட் கிராமத்தில், கடந்த 15-20 வருடங்களாக அதிக நகை போட்டுக்கொள்வது புது ட்ரெண்டாக மாறியிருக்கிறதாம். இங்கிருக்கும் சிலரின் குடும்பத்தை சேர்ந்த ஆண்கள், அரசு வேலையில் சேர்ந்திருக்கின்றனர். இது, அந்த குடும்பத்தின் பொருளாதார நிலையை பெரிதாக உயர்த்தியிருக்கிறது. இதனால், அந்த குடும்பங்களை சேர்ந்த பெண்கள், விதவிதமாக டிசைன் செய்யப்பட்ட தங்க நகைகளை அணிய தொடங்கியுள்ளனர். இவை, 180-200 கிராம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்போதைய விலைப்படி, அவ்வளவு தங்க நகைகளாஐ வாங்க வேண்டும் என்றால், அதற்கு ரூ.22 முதல் 25 லட்சம் வரை ஆகலாம். இது, அவ்வளவு தொகையை பார்த்திராத குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு வித சமூக அழுத்தத்தை கொடுத்திருக்கிறது. இதனால் இந்த முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.. ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் குடும்ப நிகழ்ச்சிகளுக்காக கடன் வாங்கி சிக்கி கொள்கிறார்கள்.. இதனால் சேமிப்பும் குறைந்துவிடுகிறது. திருமணம் என்பது ஒரு புனிதமான சடங்கு. அது பகட்டான காட்சி மேடை கிடையாது. அதனால்தான், பணக்காரர், ஏழை குடும்பங்களுக்கு இடையேயான வெளிப்படையான நுகர்வை குறைப்பது, தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது, சமூக ஒற்றுமையை வளர்ப்பது போன்ற நோக்கங்களுக்காக இந்த தங்க நகை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இந்த வழிகாட்டுதலை மீறும் எந்த பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த கட்டுப்பாடு சுந்தர் கிராமத்தில் உள்ள அனைத்து வீட்டிற்கும் கட்டாயமாகும். இந்த முடிவை கிராம மக்களும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.