"பெண்களுக்கே பாதுகாப்பில்லை... அப்புறம் எப்படி உங்களை 'அப்பா' என்று அழைப்பது?" - முதல்வர் ஸ்டாலினைச் சாடிய குஷ்பு!
தமிழக பா.ஜ., துணை தலைவர் குஷ்பு அளித்த பேட்டி: தமிழகத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டபோது, ஒருவரை கூட, முதல்வர் ஸ்டாலின் ஏன் சந்திக்கவில்லை. தி.மு.க., அமைச்சர்கள், பெண்களை இழிவாக பேசுகின்றனர். பொன்முடி உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள், பெண்களை அவதுாறாக பேசியபோது, நடவடிக்கை எடுப்பது போல் எடுத்து விட்டு, சீக்கிரமே கட்சியில் சேர்த்து கொண்டனர்.
பெண்களுக்கு எதிராக பிரச்னைகள் நடக்கும்போது, என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். தமிழகத்தின் தந்தை என உங்களை சொல்ல, நீங்கள் என்ன மகாத்மா காந்தியா? உங்கள் மீதுள்ள வழக்குகளை யாரும் மறக்கவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. ஆனால், உங்களை அப்பா என்று எப்படி கூறுவது?போக்சோ வழக்குகள், 125 சதவீதம் அதிகரித்துள்ளன.
தன் அண்ணனை பார்த்து கேள்வி கேட்க, கனிமொழி எம்.பி.,க்கு தைரியம் இல்லை. பெண்களுக்கு 1,000 ரூபாய், 2,000 ரூபாய் கொடுப்பதாக சொல்வதுதான் பெண்களின் முன்னேற்றமா? பெண்கள் முன்னேற, சொந்த காலில் நிற்க வேண்டும்.அதற்கு முன், பெண்களை மதிக்கும் அளவுக்கு நீங்கள் இருக்க வேண்டும். தொகுதி மறுவரையறை பற்றி ஸ்டாலினுக்கு தெரியாது. மத்திய பா.ஜ., அரசு பல திட்டங்களை செயல்படுத்தியும், 'பிரதம மந்திரி' என்று தான் பெயர் வைத்துள்ளது. ஆனால், ஸ்டாலின், அரசு தட்டங்களுக்கு தன்னுடைய தந்தை பெயரை வைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.