காதலுக்காக உயிர் தியாகம்! இறந்த காதலன் நினைவாக தன்னை தானே எரித்துக்கொண்ட பெண்
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே வனப்பகுதியில் இளம்பெண் எரிந்த நிலையில் சடலமாக கிடந்த சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாநகர், சீனிவாச நகர் பகுதியை சேர்ந்த அந்தோணி சாமி - கலாவதி தம்பதியின் மகள் மீரா ஜாஸ்மின் (வயது22). எம்.எஸ்.சி கணிதம் படித்த இவர் நேற்று முன்தினம் 30.10.25 நேர்முகத் தேர்வுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் இரவு வரை மீரா ஜாஸ்மின் வீடு திரும்பாததால் பெற்றோர் திருச்சி மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மீரா ஜாஸ்மின் பயன்படுத்தும் செல்போன் எண்ணின் டவர் லொகேஷனை போலீசார் ஆய்வு செய்தபோது திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம்.ஆர் பாளையத்தில் உள்ள ரிசர்வ்டு ஃபாரஸ்ட் பகுதியை காட்டியுள்ளது.
இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட சிறுகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் போலீசார் வனப்பகுதியில் தேடிப் பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் உள்ள கோவில் அருகே எரிந்த நிலையில் பெண் கிடந்த சடலத்தை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் சடலமாக கிடந்த பெண் காணாமல்போன மீரா ஜாஸ்மின் என்பது தெரியவந்தது. மேலும் அவரை யாரோ கொலை செய்து எரித்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனையடுத்து மீரா ஜாஸ்மின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீரா ஜாஸ்மின் இறப்பில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வனப்பகுதியில் பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் உண்மையை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் தனிப்படை போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். தனிப்படை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வந்த அந்தோணி சாமி - கலாவதி தம்பதியினரின் மகள் மீரா ஜாஸ்மின் கல்லூரி இளங்கலை பட்டம் படித்துக்கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த மீரா ஜாஸ்மினின் பெற்றோர் மக்களிடமும் மகளின் காதலனிடம் காதலை கைவிடுமாறு அறிவுருத்தியுள்ளனர். ஆனால் இருவரும் காதலை கைவிடாமல் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து மீரா ஜாஸ்மின் பி.எஸ்.சி இளங்கலை பட்டம் படித்து முடித்த பின்னர் அவரது பெற்றோர் திருச்சிக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளனர்.
திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் மீரா ஜாஸ்மின் தனது எம்.எஸ்.சி கணிதம் முதுநிலை படிப்பை தொடங்கியுள்ளார். ஆனால் மீரா ஜாஸ்மின் காதலை கைவிடாமல் பெற்றோருக்கு தெரியாமல் காதலனுடன் தினமும் செல்போனில் பேசி வந்துள்ளார். அப்போது காதலர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஒரு சில மாதங்கள் பேசாமலும், பின்னர் சமரசம் ஆகி பேசிக்கொண்டு இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2024 ஆம் வருடம் டிசம்பர் மாதம் மீண்டும் காதலர்களுக்கு இடையே செல்போனில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த காதலன் மீரா ஜாஸ்மினுக்கு கடந்த 09.12.2024 அன்று வீடியோ கால் செய்து மீரா ஜாஸ்மின் கண் முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த மீரா ஜாஸ்மின் காதலனின் பெற்றோரிடம் அவர் பயன்படுத்திய செல்போன் நம்பரை விட்டுவிட வேண்டாம் நான் ரீஜார்ஜ் செய்துகொள்கிறேன் என கூறியுள்ளார்.
அதன்படி காதலன் பயன்படுத்திய செல்போன் நம்பருக்கு அவ்வப்போது ரீசார்ஜ் செய்த மீரா ஜாஸ்மின் தனது காதலன் உயிருடன் இருபதுபோல் எண்ணி தினமும் குட் மார்னிங்... சாப்பிட்டியா... என்ன பண்ற... என நலம் விசாரித்து மெசேஜ் செய்து வந்துள்ளார். இந்நிலையில்தான் மீரா ஜாஸ்மின் எம்.ஆர் பாளையம் வனப்பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது தனிப்படை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மீரா ஜாஸ்மினை யாரேனும் கொலை செய்து எரித்தார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் துப்பு துலக்கினர். இதில் மீரா ஜாஸ்மின் எரித்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இடத்தின் அருகே கோவிலில் இருந்து போலீசாரால் கைப்பற்றப்பட்ட மீரா ஜாஸ்மினின் உடைமைகளை ஆய்வு செய்து தனிப்படை போலீசார் அடுத்தக்கட்ட விசாரணையில் ஈடுபட்டனர். இதில் நேர்முகத்தேர்வுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அன்று திருச்சி, வயலூர் சாலையில் குமரன் நகரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மீரா ஜாஸ்மின் பெட்ரோல் வாங்கியது தெரியவந்துள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஏற்கனவே காதலனை இழந்து மன வேதனையில் இருந்து வந்த மீரா ஜாஸ்மின் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.