×

வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே அதிர்ச்சி: மதிய உணவு இடைவேளையில் பெண் பணிநீக்கம்!

 

இன்றைய வேலைவாய்ப்புச் சந்தையில் வேலை கிடைப்பதே பெரும் குதிரைக் கொம்பாக இருக்கும் நிலையில், கிடைத்த வேலையும் எவ்வளவு நிலையற்றதாக மாறக்கூடும் என்பதற்குச் சான்றாக அமெரிக்காவில் ஒரு திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. புதிய வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே, மதிய உணவு இடைவேளையின் போது பெண் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்ட நிகழ்வு இணையத்தில் காரசார விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண், ஏற்கனவே ஒரு மருத்துவமனையில் மாலை நேரச் ஷிஃப்ட்டில் பணியாற்றி வருகிறார். தனியாக வீடு வாங்குவதற்காகச் சிறுகச் சிறுகப் பணம் சேமிக்கும் நோக்கில், பகுதி நேரமாக மற்றொரு காலையில இயங்கும் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.

வேலைவாய்ப்பு விளம்பரத்திலும், நேர்காணலிலும் "திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே பணி" என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்தப் பெண் தனது மருத்துவமனைப் பணியைக் மாலை 6:00 மணிக்குத் தொடங்குமாறு மாற்றியமைத்துக்கொண்டு, இந்தப் புதிய வேலையில் சேர்ந்துள்ளார்.

ஆனால், வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே ஊழியர்களுக்குப் பேரிடி காத்திருந்தது. வாரத்திற்கு 5 நாட்கள், தினமும் 9 மணி நேரப் பணி என்பதற்குப் பதிலாக, தினமும் 12 மணி நேரப் பணி, வாரத்தில் 6 முதல் 7 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என நிறுவனம் திடீரெனக் கெடுபிடி விதித்தது.

இந்தத் திடீர் பணிநேர மாற்றத்தால் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் ஊழியர்களைத் தெரிவிக்குமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில்: "அவர்கள் கேட்டதை நம்பி, என்னைப் போலக் குழந்தைகளைப் பராமரிப்பவர்கள், இரண்டாவது வேலைக்குச் செல்பவர்கள் எனப் பலர் தங்கள் சூழ்நிலையைக் கூறினர். நானும் நேர்மையாக எனது நிலைமையை விளக்கி, விடுமுறை நாட்களில் 12 மணி நேரம் வேலை செய்வதாகக் கூறினேன். அவர்கள் புன்னகையுடன் எங்கள் பெயர்களைக் குறித்துக் கொண்டனர். ஆனால், மதிய உணவு இடைவேளையின் போது முகமை (Agency Recruiter) மூலம் எங்களை வேலையை விட்டு நீக்கிவிட்டதாகத் தகவல் வந்தது. பாதுகாப்புப் படையினரை வைத்து எங்களை உடனடியாக வெளியேற்றினார்கள்" எனத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஒரே நாளில், தனது வாழ்க்கை அட்டவணையை மாற்றி, முதல் நாளிலேயே வேலையை இழந்து, அன்றைய மருத்துவமனைச் சம்பளத்தையும் இழந்து நிற்பதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சமூக வலைத்தளப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான இணையவாசிகள் அந்தப் பெண்ணிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • "ஏமாற்று வேலையிலிருந்து தப்பித்துவிட்டீர்கள்:" "ஆரம்பத்திலேயே பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து உங்களைச் சுரண்ட நினைத்த ஒரு நிறுவனத்திடமிருந்து தப்பித்துவிட்டீர்கள். இதற்கு நீங்கள் மகிழ்ச்சிதான் அடைய வேண்டும்" என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.

  • "சட்டப்படி தவறு:" "பணிநேரத்தை இப்படித் திடீரென மாற்றுவது 'பேட்-அண்ட்-ஸ்விட்ச்' (Bait-and-Switch) எனப்படும் சட்டவிரோதச் செயலாகும். நீங்கள் வேலைவாய்ப்பு வழக்கறிஞரை அணுக வேண்டும்" என மற்றொருவர் அறிவுறுத்தியுள்ளார்.

  • "உழைப்பவர்களுக்குப் பாதுகாப்பில்லை:" "இன்றைய காலகட்டத்தில் பணி நியமனக் கடிதம் (Offer Letter) வாங்கிய பிறகும் கூட வேலைக்குப் பாதுகாப்பில்லாத சூழலே நிலவுகிறது" எனப் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.