×

சிதம்பரம்: வெடி விபத்தில் உடல்சிதறி பலியான பெண்..!!

 

சிதம்பரம் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் ஒருவர் உடல்சிதறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 சிதம்பரம் அருகே உள்ள சம்பந்தம் கிராமத்தில் நாட்டு வெடி மருந்து வைத்து வெடி தயாரிக்கும் கூடம் செயல்பட்டு வருகிறது. உரிய அனுமதி பெற்று இயங்கி வரும் இந்த வெடி தயாரிப்புக் கூடத்தில், வழக்கமாக 10 பேர் வரை பணியில் இருப்பார்கள். இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் லதா( 37) என்கிற பெண் மட்டும் நாட்டு வெடி  தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.  அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வெடி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டிருந்த லதா உடல் சிதறி பலியானார். 

மேலும், மருந்து பொட்கள் தயாரிப்புக் கூடாரமானது முழுவதுமான இடிந்து தரைமட்டமானது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கடலூர் மாவட்ட போலீஸார் மற்றும் பரங்கிப்பேட்டை போலீஸார் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த லதாவின் உடலைக் கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக  பரங்கிப்பேட்டை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரும் நேரில் விசாரணை நடத்தினார். ஞாயிற்றுக்கிழமை என்பதால்  பலரும் பணியில் இல்லை என்பதாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் வெடி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.