ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்த த.வெ.க., அடுத்தகட்டமாக... - மு.க. ஸ்டாலின் விமர்சனம்..!!
போதைப்பொருள் வழக்கில் தவெக நிர்வாகி பூபாலன் கைதானது பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டு தவெக தலைவர் ஊருக்கு உபதேசமா? போதைப்பொருள் வழக்கில் தவெக நிர்வாகி பூபாலன் கைதானது பற்றி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்.
நாகையில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், சோதனையில் ஈடுபட்ட மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த சுகன் என்பவர் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து தவெக நிர்வாகி பூபாலன் உள்ளிட்ட 3 பேர் தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் 270 கோடி ரூபாய் மதிப்பில் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்
வேளாங்கண்ணியில் விடுதியை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து போதைப் பொருட்களை பதுக்கிவைத்து இலங்கைக்கு கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக நிர்வாகி பூபாலன், சுகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவர்களை நாகை சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். இதனிடையே, போதைப் பொருள் வழக்கில் கைதான பூபாலனை தவெகவில் இருந்து நீக்கி நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறன் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party என்றும் விமர்சனம் செய்திருக்கிறார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?. ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும்
தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள். ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது. "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்." என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.