×

மதுபிரியர்கள் ஷாக்..! டாஸ்மாக் கடைகள் திடீர் மூடல்..!  

 

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள், அதை அருந்தி விட்டு பல்வேறு இடங்களில் தூக்கி போட்டு விடுகின்றனர். இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மனிதர்கள், கால்நடைகள் மிதிக்கும் போது காயங்கள் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றை கையிலெடுத்த சென்னை உயர் நீதிமன்றம் சுற்றுச்சூழலுக்கு தூங்கு ஏற்படுத்தும் வகையில் காலி மதுபாட்டில்களை போடக் கூடாது. இதற்கு தீர்வு காணும் வகையில் டாஸ்மாக் கடைகளே திரும்ப பெற்றுக் கொண்டால் என்ன? என்று கேள்வி எழுப்பியது. 

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் ஒவ்வொரு மதுபான பாட்டிலையும் விற்பனை செய்யும் போது கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து நுகர்வோரிடம் வசூல் செய்ய வேண்டும். மீண்டும் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அந்த 10 ரூபாயை திருப்பி செலுத்தி விட வேண்டும். இந்த திட்டத்தை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


முதல்கட்டமாக கோவை, தர்மபுரி, நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அமலில் உள்ளது. இதன்மூலம் 95 சதவீத மதுபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டன. இந்த திட்டத்தின் மூலம் வசூலிக்கப்பட்ட 450 கோடி ரூபாயில் 350 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட்டது.

எஞ்சிய தொகைக்கான மதுபாட்டில்கள் இன்னும் வரவில்லை. எனவே அந்த தொகையை வங்கி கணக்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிவகங்கை, மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் இன்று (செப்டம்பர் 1, 2025) முதல் அமல்படுத்தப்படுகிறது. வரும் நவம்பர் மாதத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக்கம் செய்வதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் முடிவு செய்தனர்.


இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப கொடுத்தால், 10 ரூபாய் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான பணியாளர்கள் கூட்டம் சமீபத்தில் நந்தது. இதில், பணியாளர்கள், டாஸ்மாக் கடைகள் அருகிலேயே காலி மதுபாட்டில்களை வாங்கி வைத்துக் கொள்ள, தனியாக இடம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான வாடகையை பணியாளர்களே செலுத்த வேண்டும் என, டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கு பணியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திருவள்ளூர் அருகே காக்களூர் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் கூட்டுக் குழுவினர் திடீரென முற்றுகையிட்டனர். அப்போது திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு ஊழியர்களின் கோரிக்கைகளை எடுத்துரைக்க நீதிமன்ற உத்தரவின்படி குழு அமைத்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். அதுவரையில் மேற்கு மாவட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டமாட்டோம், காலி பாட்டில்களை வாங்க மாட்டோம் என்பதை வலியுறுத்தி டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் திருவள்ளூர் சுற்றுவாட்டாரத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளதால் மதுகிடைக்காத விரக்தியில் மதுபிரியர்கள் பரிதவிப்புடன் திரும்பி செல்கின்றனர்.