×

சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா? - இபிஎஸ் தாக்கு..!

 

மின் கட்டண உயர்வு, மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமை வகித்தார். தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது; காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி, விவசாயிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். கர்நாடகா அரசு மேகதாது அணைக் கட்டுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். வறட்சி நிலவும் இக்காலத்தில் ஏரி, குளங்களில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை முழுமையாக தடுத்து நிறுத்த, ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது. தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் மக்களுக்கான எந்தவொரு புதிய திட்டமும் இல்லை. எல்லாம் ரீல்ஸ், ரீல் விடும் ஆட்சியைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

முதல் 100 நாட்களில் தான் ஒரு ஆட்சியில் திட்டங்கள் எப்படி போடுகிறார்கள், அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை மக்கள் பார்ப்பார்கள். ஆனால், இந்த 100 நாட்களில் இவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து விவசாயிகள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள் போராட்டங்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆட்சியில் மக்களுக்கான திட்டங்கள் ஏதுமே பார்க்க முடியவில்லை.பட்ஜெட்டிலும், வேளாண் பட்ஜெட்டிலும் ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு 'வெற்றி' எனப் பெயரிட்டுள்ளதே இந்த ஆட்சியின் 100 நாள் சாதனையாகும். சென்னையில் சொத்து வரி உயர்ந்ததைப் போல, இன்னும் நிறைய வரி உயரும். இது ஆரம்பம் மட்டும் தான். இவ்வாறு கூறினார்.மேலும், இன்றைய போராட்டத்தை அதிருப்தி நிர்வாகிகளான எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் புறக்கணித்தது தொடர்பான கேள்விக்கு, பதிலளித்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா?, கட்சிக்குள் பேசவேண்டியதை எல்லாம் பொது வெளியில் பேச முடியாது என்றார். இந்த அரசு பொறுப்பேற்று 3 மாதத்தில் 20,000 கோடி கடன் வாங்கியுள்ளது. இதுதான் ஆரம்பம், போகப்போக பாருங்கள் எவ்வளவு வரி உயரப்போகிறது என்று? என கூறினார்.