ரேஷன் பொருள் 3 மாதங்களுக்கு மேல் வாங்கவில்லையென்றால் குடும்ப அட்டை ரத்தாகுமா..?
இந்தியாவில் விலைவாசி உயர்ந்துவரும் நேரத்தில், எளியமக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் விதத்தில் தமிழக அரசின் ரேஷன் பொருட்கள் பயன்படுகின்றன.மேலும், போலி குடும்ப அட்டைகளை தவிர்ப்பதற்காக ரேஷன் விநியோகிக்கும் முறையை கணினி மையமாக மாற்றினர்.இதனால் போலி குடும்ப அட்டைகள் ஓரளவிற்கு ஒழிக்கப்பட்டன. தமிழகத்தில் மொத்தம் இரண்டு கோடியே 60 லட்சம் குடும்ப அட்டைகள் பதிசெய்யப்பட்டிருந்தன.
இதற்கிடையே, மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகள் என்னவாகும் தெரியுமா ? அவர்களுக்கு பொருட்கள் கிடைக்குமா ?
நீண்ட நாட்களாகப் பொருட்கள் வாங்கப்படாத கார்டுகள், அந்த முகவரியில் ஆட்கள் இல்லை அல்லது அது ஒரு தேவையற்ற கார்டு எனக் கருதப்பட்டு, அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
ஒவ்வொரு மாதமும் ஒரு ரேஷன் கடைக்கு அந்தந்த கார்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே அரிசி, சர்க்கரை, பருப்பு போன்றவை ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒரு கார்டில் பொருட்கள் வாங்கப்படாவிட்டால், அடுத்தடுத்த மாதங்களில் அந்த கார்டுக்கான ஒதுக்கீட்டைத் துறை ரீதியாகக் குறைக்க அல்லது நிறுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் அரசுக்கு ஏற்படும் வீண் விரயம் தவிர்க்கப்படுகிறது.தொடர்ந்து பொருட்கள் வாங்காத கார்டு தாரர்களின் வீட்டிற்கே வந்து வட்ட வழங்கல் அலுவலர்கள் அல்லது ரேஷன் கடைப் பணியாளர்கள் ஆய்வு நடத்தலாம்.
அந்த குடும்பம் அந்த முகவரியில் தான் வசிக்கிறதா? அல்லது வேறு இடத்திற்கு மாறிவிட்டார்களா? என்பதை உறுதி செய்த பிறகே கார்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். பொருட்கள் வாங்காத பட்சத்தில், முன்னுரிமை உள்ள கார்டுகள் (PHH) முன்னுரிமை இல்லாத கார்டுகளாக (NPHH) மாற்றப்படலாம். இதனால் எதிர்காலத்தில் அரசு அறிவிக்கும் சில சிறப்புச் சலுகைகள் அல்லது கூடுதல் மானிய விலைப் பொருட்கள் அந்த கார்டுதாரர்களுக்குக் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு ரேஷன் கார்டு ஒரு அடிப்படை ஆவணமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெறுபவர்கள், தங்களின் ரேஷன் கார்டைச் சரியாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். கார்டு முடக்கப்பட்டால், இந்த உதவித்தொகையும் பாதிக்கப்படலாம். பலர் வேலை நிமித்தமாக வேறு ஊர்களுக்குச் செல்லும்போது ரேஷன் கார்டை மாற்றாமல் விட்டுவிடுவார்கள். அங்கு பொருட்கள் வாங்காத நிலையில், பழைய முகவரியில் உள்ள கார்டு ரத்து செய்யப்படலாம். இதனால் புதிய முகவரியில் கேஸ் சிலிண்டர் இணைப்பு பெறுவது அல்லது பிற அரசு ஆவணங்களைப் புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்படும்.
அரிசி அட்டைதாரர்கள் (Rice Card) நீண்ட காலம் பொருட்கள் வாங்காமல் இருந்தால், அந்த கார்டு முழுமையாக ரத்து செய்யப்பட வாய்ப்பு உண்டு. ஒருமுறை கார்டு ரத்து செய்யப்பட்டால், மீண்டும் புதிய கார்டுக்கு விண்ணப்பித்து அதைப் பெறுவது என்பது நீண்ட கால நடைமுறை மற்றும் சிரமமான காரியமாகும்.ரேஷன் கார்டைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புபவர்கள், மாதந்தோறும் குறைந்தபட்சம் மண்ணெண்ணெய் அல்லது சர்க்கரையையாவது வாங்குவது நல்லது.