மூன்று மாதம் தாங்குமா தவெக அரசு? சந்தேகம் கிளப்பும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!
விசிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு கடந்த மே-24 ஆம் தேதி அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில் தன்னுடைய ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோருடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், "திமுக தலைவர் என்ற முறையில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். கடந்த ஐந்து வருடமாக சட்டமன்றத்தில் பனையூர் பாபுவை தொடர்ந்து கவனித்தது உண்டு. சட்டமன்றத்திற்கு அமைதியாக வந்து அமைதியாகச் செல்வார் பனையூர் பாபு. ஆனால் சட்டமன்றத்தில் பேசும் போது ஆக்கபூர்வமான கருத்துக்களை தன்னுடைய தொகுதிக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அங்கே வலியுறுத்தி பேசக்கூடியவர்.
அரசியல் மாறுபாடுகள், வேறுபாடுகளை விளக்கத்தோடு சுட்டிக்காட்டி ஏற்கனவே அறிக்கையாக வெளியிட்டு இருந்தார். அதை நானும் படித்தேன். அதில் கூட யாரையும் புண்படுத்தக்கூடிய வார்த்தைகள் ஏதுமில்லை. கொண்ட கொள்கைக்காக உறுதியோடு பணி செய்யக்கூடியவர் தான் செயல்வீரர் பனையூர் பாபு. பரமக்குடியில் சாதி மறுப்பு போராளி இமானுவேல் சேகரனுருக்கு மணிமண்டபம் வைத்தது திமுக தான். தாத்தா ரெட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் அமைத்து தந்தோம். நந்தனத்தில் எம்.சி ராஜா மாணவர் விடுதியை புதுப்பித்து கட்டினோம். அதை பார்க்கும்போது நமக்கே பெருமையாக இருக்கிறது.
செய்யூர் தொகுதிக்கு திமுக அரசு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியது. செய்யூரில் கலை அறிவியல் கல்லூரி, புதிய சிப்காட் தொழிற்சாலை, அரசு மருத்துவமனை, 28 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலைபின்னும் கூடங்கள், கடல் அரிப்பை தடுக்க தடுப்புச் சுவர்கள், பத்தாயிரம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் இப்படி பல்வேறு சாதனைகள் அந்த தொகுதியில் நாங்கள் செய்தோம். அவரது கொள்கை பயணத்தை தொடர சரியான இயக்கம் திமுக தான் என நினைத்து அவர் நம்மிடம் இணைந்திருக்கிறார்.
அவரையும் அவரோடு வந்திருக்கும் அனைவரையும் இந்த இயக்கத்தின் தலைவனாக மட்டுமல்ல, தலைமை தொண்டனாக வருக வருக என வரவேற்கிறேன். திமுகவை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்கும்போது, வேலை அதிகமாக இருக்கும், அப்படிப்பட்ட நேரத்தில் உழைப்பதற்கு தயாராக நாங்கள் இருக்கிறோம், நாங்கள் உங்களுக்கு துணை நிற்கிறோம் என இன்று துணையாக வந்து சேர்ந்திருக்கக்கூடிய உங்களை வரவேற்கிறேன்.
நீங்கள் ஏற்கனவே பயணித்த இயக்கத்தை பற்றி விமர்சிக்க தேவையில்லை, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் இருக்கும் என்று அண்ணா சொல்லி இருக்கிறார். யாரையும் குறைத்து மதிப்பிட்டு பேச வேண்டிய அவசியம் இல்லை. இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்று நான் சொல்ல வேண்டிய தேவை இல்லை. இந்த ஆட்சி பொறுப்பேற்ற போதே ஆறு மாதத்திற்கு விமர்சிக்கமாட்டோம் என்று கூறி இருந்தோம். ஆனால் ஆறு மாதத்திற்கு உள்ளேயே பேசக்கூடிய சூழல் வந்துவிடுமோ? என்ற அச்சம் வந்துவிட்டது, பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி ஆறு மாதம் அல்ல, ஐந்து மாதம் அல்ல, மூணு மாசமாவது தாங்குமா?" என்ற கேள்விக்குறியோடு இந்த ஆட்சி நடப்பதாக தெரிவித்தார்.