×

இனி ரேஷன் கடைகளிலும் நாப்கின் கிடைக்குமா? உயர்நீதிமன்ற வழக்கால் அதிரடி திருப்பம்!

 

ஏழை பெண்கள் குறிப்பாக கிராமப்புற பெண்கள் பயன் பெறும் வகையில் ரேசன் கடைகளில் மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ நாப்கின்களை வழங்க உத்தரவிடக் கோரி தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் பள்ளி மாணவிகளுக்கும், பிரசவித்த தாய்மார்களுக்கும் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தமிழ்நாட்டில் 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்பட்டுள்ளன. அங்கு மானிய விலையில் நாப்கின்கள் விற்கப்பட்டு வருகின்றன.

முதல்வர் மருந்தகங்களில் மானிய விலையில் நாப்கின்கள் விற்பனை செய்யப்படுவது பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மானிய விலையில் நாப்கின்கள் கிடைக்கச் செய்யும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தவுள்ளோம்" என்று தெரிவித்தார்.

இதற்கு நீதிபதிகள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் இந்த மருந்தகங்களின் எண்ணிக்கையை விரைந்து அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 29- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். அத்துடன், அன்றைய தினம் கூடுதல் முதல்வர் மருந்தகங்கள் தொடங்குவது குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞரை அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மருந்தகங்களில் ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் தரமான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக தனியார் மருந்தகங்களில் ஒரு மாத்திரை விலை ரூபாய் 30 என்றால் இங்கு ரூபாய் 10 தான்.

லட்சக்கணக்கான மக்கள் பயன் பெற்று வரும் நிலையில் மக்கள் மருந்தகங்கள் மேலும் விரிவுபடுத்தும் பட்சத்தில் சர்க்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள் உள்ளிட்டோர் அதிகளவில் பயனடைவர். அத்துடன், அரசுக்கும் பெருமளவில் வருமானம் கிடைக்கும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.