×

48 மணி நேரம் தான் தாக்குப் பிடிப்பார்? சோனம் வாங்சுக் உடல்நிலை குறித்து மருத்துவ குழு அதிர்ச்சி தகவல்!

 

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லியில் ஜூன் 28 முதல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற இளைஞர் அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது உண்ணாவிரதப் போராட்டம் 19-வது நாளை எட்டிய நிலையில், வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி போராடி வரும் 59 வயதான சோனம் வாங்சுக்கின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அவர் 8.2 கிலோவிற்கும் அதிகமான உடல் எடையை இழந்துள்ளார்.

கடுமையான தசை இழப்பு, தீவிர பலவீனம், தலைச்சுற்றல் மற்றும் ரத்த அழுத்தக் குறைவு போன்ற கோளாறுகளால் தவிப்பதாக அவரது மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது அவர் எழுந்து அமரக் கூட முடியாமல் படுத்த படுக்கையாகவே போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். இருப்பினும், "நான் உடலளவில் பலவீனமாக இருந்தாலும், மனதளவில் மிகவும் உறுதியாக இருக்கிறேன்" என்று வாங்சுக் வீடியோ பதிவில் பேசியுள்ளார்.

தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார். இது குறித்து நேற்று நள்ளிரவு அவர் வெளியிட்ட வீடியோவில், "நான் இப்போது உணவருந்தினால் என்ன செய்தி சமூகத்திற்கு செல்லும்?

அமைதியான முறையில் போராடுபவர்களுக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இல்லை என்ற தவறான செய்தி தான் போய் சேரும். போராட்டக்காரர்கள் வருவார்கள், அமர்வார்கள், பிறகு கலைந்து போவார்கள் என்றே அரசு நினைக்கும். அரசாங்கத்திடம் இருந்து முறையான பதில் வராதவரை நான் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை" என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மேலும், "என்னைக் காப்பாற்றவும், தேசத்தைக் காப்பாற்றவும் நினைப்பவர்கள், கரப்பான்பூச்சி ஜனதா அமைப்பின் ஆன்லைன் மனுவில் கையெழுத்திட்டு, ஜூலை 20 நாடாளுமன்றப் பேரணியை பலப்படுத்துங்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்பது தான் அவர்கள் கற்கும் அரசியல் அறிவியல் மற்றும் ஜனநாயகத்திற்கான உண்மையான பாடம்" என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மிக மோசமாகி வருவதால், அவர் இன்னும் 48 மணி நேரத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க மாட்டார் என அச்சம் தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு மாற்றி, தேவைப்பட்டால் குழாய் மூலம் கட்டாய உணவு வழங்கி உயிரை காப்பாற்ற வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவின் தீவிரத்தன்மையை உணர்ந்த டெல்லி உயர் நீதிமன்றம், இது குறித்து மத்திய அரசு மற்றும் டெல்லி அரசிடம் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உயிரும் மிகவும் மதிப்புமிக்கது. அதைப் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும்' என்று தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் மூலம் சோனம் வாங்சுக்கின் உடல்நிலையைத் தினமும் பரிசோதிக்க வேண்டும் என்றும், அவரது உடல்நிலை மோசமடையும் பட்சத்தில் தேவையான அனைத்து அவசர மருத்துவ சிகிச்சையையும் உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாங்சுக்கின் போராட்டத்திற்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் தொலைபேசி மூலமாகவும், நேரிடையாகவும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாக அறிவித்துள்ளார். இருப்பினும், இவ்வளவு தீவிரமான சூழலிலும் மத்திய அரசுத் தரப்பிலிருந்து இதுவரை யாரும் வாங்சுக்குடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை என்றும், அரசாங்கத்தின் இந்த மௌனம் கண்டனத்திற்குரியது என்றும் போராட்டக் குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.