இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்பார்களா?- ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!
திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "தொகுதி மறுசீரமைப்பு மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் வரவில்லை, ஏற்கனவே இந்த மசோதா தொடர்பாக யோசனைகளையும், திருத்தங்களையும் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளோம்.
தொகுதி மறுவரையறைக்கான கால அவகாசம் வரையறுக்கப்படவில்லை. மசோதா வந்த பிறகும், அதில் உள்ள சட்டத்திருத்தங்கள் வந்த பிறகும், நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஆலோசனைச் செய்து தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார். தொகுதி மறுசீரமைப்புத் தொடர்பாக ஏற்கனவே திமுக சார்பில் ஆலோசனைகளைக் கொடுத்துள்ளோம். அதையெல்லாம் கேட்டு எதன் அடிப்படையில் மசோதா நிறைவேற்றுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கும், தென்மாநிலத்திற்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது.
தொகுதி மறுசீரமைப்பு என்பது பிறக்காத குழந்தை. அதனால் அது ஆணா, பெண்ணா என பார்த்த பிறகு தான் பெயர் வைக்க வேண்டும். நாங்கள் எல்லாம் குழந்தை பெற்றவர்கள். அதனால் நாங்கள் இதை இப்படிதான் பார்க்க முடியும். இப்போது இருக்கும் பிரச்சனை மேகதாது பிரச்சனை, இதைப்பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெளிவாகப் பேசியுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனப் பேசியுள்ளார். குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என தமிழ்நாட்டு மக்கள் தாகத்தில் உள்ளனர். பிறக்காத குழந்தைக்கு பெயர் வைப்பது என்ன அர்த்தம்?
தமிழ்நாடு அரசு கூட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமா?, வேண்டாமா? என மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார். காவிரி பிரச்சனையைத் திசை திருப்புவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்துகிறார்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதைத் தொடர்ந்து பேசிய திமுகவின் செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், "காவிரி விவகாரத்தைத் திசைத் திருப்புவதற்காகத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக எம்.பி.க்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசாங்கம் கூட்டுகிறது. கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்பார்களா? இல்லையா? என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசின் பட்ஜெட்டில் ஒன்றுமில்லை, பொய்தான் உள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு ரூபாய் 8,000 நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அதனை ரூபாய் 20,000 ஆக உயர்த்துவோம் என்று கூறினார். ஆனால் தற்போது மீனவர்களுக்கான நிவாரணம் ரூபாய் 8,000- லிருந்து ரூபாய் 7,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் பெயர் மாற்றத்தை தவிர உருப்படியான அறிவிப்பாக ஒன்றுமில்லை, திமுக திட்டங்களுக்கு பெயர் மாற்றிக் கொண்டுள்ளனர்" என்று விமர்சித்துள்ளார்.