×

இப்படி கூட மரணம் வருமா..? சென்னையில் முந்திரி சாப்பிட்ட குழந்தை பலி..!

 

சென்னை எம்.ஜி.ஆர். நகர், மாணிக்கவாசகம் தெருவைச் சேர்ந்த சிவகுமார் - அருணா தம்பதியினரின் இளைய மகள் ஹரிவர்த்தினி (2 1/2). நேற்று இரவு சிறுமி தனது சகோதரியுடன் விளையாடிக்கொண்டே முந்திரி சாப்பிட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முந்திரி பருப்பு தொண்டையில் சிக்கியதில், சிறுமிக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நொடிகளிலேயே நிலைமை மோசமடைய, சிறுமி ஹரிவர்த்தினி மயங்கி விழுந்துள்ளார்.

சிறுமி மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். முந்திரி பருப்பு சுவாசப் பாதையில் அடைப்பை ஏற்படுத்தியதே உயிரிழப்பிற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

விளையாடிக்கொண்டே சாப்பிட்ட சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிய வகை உணவுகள் அல்லது கொட்டைகளை (Nuts) குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது, அவர்கள் விளையாடிக்கொண்டோ அல்லது ஓடிக்கொண்டோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பெரியவர்கள் உடனிருந்து கண்காணிப்பது அவசியம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.