2 மாதங்களில் கசந்த ’இன்ஸ்டா’ காதல் திருமணம்...மனைவி தற்கொலை- கணவன் கைது
ஈரோட்டில் திருமணமான இரண்டு மாதங்களில், இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதல் கணவனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியை சேர்ந்த 22 வயது அலாவுதீனும், தரும்புரியை சேர்ந்த பட்டியலின பெண் இசைகலையும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி காதலித்து இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஈரோடு குமலன் குட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். அலாவுதீன் கட்டுமான பணிக்கு சென்று வந்த நிலையில், கடந்த 10.ம் தேதி இசைகலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேதத்தை மீட்ட ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இறந்ததால், வருவாய் கோட்டாச்சியரும் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் காதல் திருமண வாழ்க்கையில் இரண்டே மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மது அருந்தி விட்டு தினமும் இசைகலையை, அலாவுதீன் அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது. இதனால் மனமுடைந்த இசைகலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் பெண் வன்கொடுமை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அலாவுதீனை கைது செய்தனர்.