கள்ளக்காதலை கண்டித்ததால் தகராறு செய்த கணவன்... மனைவி தூக்கிட்டு தற்கொலை! பரிதவிக்கும் 10 மாத குழந்தை
திருவள்ளூரில் கணவனின் கள்ளத் தொடர்பை கண்டித்து தாய் வீட்டிற்கு வந்த மனைவியிடம் 10 மாத கைக்குழந்தையை கேட்டு ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கணவனை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் ஜவகர்நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வ/30). அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுனராக பணியாற்றி வரும் இவருக்கு திருவள்ளூர் பெருமாள் செட்டி தெருவை சேர்ந்த லாவண்யா (24) என்பவருடன் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி தற்போது 10 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்படுவதுண்டு. வரதட்சணை கேட்டு தொந்தரவு கொடுத்ததாக லாவண்யா பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு நடைபெற்ற தகராறையடுத்து லாவண்யா பெருமாள் செட்டி தெருவில் உள்ள தாய் வீட்டில் வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு லாவண்யாவிடம் வந்து குழந்தையை கொடுக்குமாறு கணவர் கேட்டுள்ளார். குழந்தையை தர மறுத்ததால் ஆத்திரத்தில் மனைவி லாவண்யாவை தாக்கியுள்ளார். இது குறித்து லாவண்யா தனது தாயாருக்கு போன் செய்து தகவலை கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து கதவை தாழிட்டுக் கொண்டு மின்விசிறியில் புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து லாவண்யாவின் உறவினர்கள் வந்து பார்த்தபோது தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது கணவர் சுனில்குமார் அங்கு இருந்துள்ளார். இது குறித்து லாவண்யாவின் தாய் அமுதா திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதில், திருமணமாகி 4 ஆண்டுகளாகியும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், கணவருக்கு வேறொரு பெண்ணுடன் இருந்த கள்ளத் தொடர்பை கண்டித்ததாலும், அடித்து சித்ரவதை செய்து தற்கொலைக்கு தூண்டிய கணவர் சுனில்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தனர். ஆனால் காவல் துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உடலை வாங்க மறுத்து லாவண்யாவின் உறவினர்கள் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் டவுன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். கணவர் சுனில்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இருப்பினும் கைது செய்தால் தான் உடலை வாங்கப்போவதாகவும் தெரிவித்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.