வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்..!
தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவை, கடந்த 10ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டது. அந்த நிகழ்ச்சியில், முதலில் 'வந்தே மாதரம்' பாடலும், இரண்டாவதாக 'தேசிய கீதமும்', மூன்றாவதாக 'தமிழ்த் தாய்' வாழ்த்தும் பாடப்பட்டது.
அதற்கு தவெக அரசுக்கு ஆதரவு அளித்துவரும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பான கேள்விக்கு அன்றிரவே பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என்று உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இதுகுறித்து பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக முதலில் 'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட்ட விவகாரம் தற்பொழுது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மத்திய உள்துறை செயலகத்தின் வழிகாட்டுதல் அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த முறை பின்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. எனினும், விழாவின்போது தமிழ்நாட்டின் மரபுப்படி 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலைத்தான் முதலில் பாட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரிடம் சுமார் 5 நிமிடங்கள் நேரில் நின்று மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்தினார். அதற்கு உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி ஆளுநா் அா்லேக்கா் முதல்வா் விஜயிடம் விளக்கம் அளித்தாா்
இந்த விவாதங்களுக்கு மத்தியில், கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளும் தற்பொழுது சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்திலேயே, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்கும் அரசு விழாக்களில் இதேபோன்று 'வந்தே மாதரம்' பாடல்தான் முதலில் பாடப்பட்டது என்ற விவரமும் தற்பொழுது முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆளுநரின் விளக்கம் மற்றும் முந்தைய ஆட்சி கால நடைமுறைகள் ஒருபுறம் இருந்தாலும், மாநிலத்தின் அடையாளமான தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலமைச்சர் விஜய் முக்கியத்துவம் கொடுத்துப் பேசிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.