×

இன்றே மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்பட்டது ஏன்? - அரசு தரப்பு விளக்கம்..!!

 

மகளிர் உரிமை தொகை ரூ.5,000 முன்பே வரவு வைக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது. 

 பிப். 15 ஆம் தேதி ஞாயிறு என்பதாலும், பிப்.14 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதாலும் பிப்.13 ஆம் தேதியே ரூ.5,000 வரவு வைக்கப்படுவதாகவும் அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது. மே மாதம் வரை மட்டுமே இந்த ஆட்சிக்கான அதிகாரம் என்பதால் அடுத்த 3 மாதங்களுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், இலவசங்கள் தொடர்பான வழக்கு மார்ச் மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு வருவதால் முன்கூட்டியே வரவு வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13-02-2026) சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளதாவது:-

வணக்கம். மிக மிக முக்கியமான விஷயத்துக்காகத்தான் இந்தக் காணொலி! இன்றைக்குக் காலையில், நம் அரசு சார்பில் 5 ஆயிரம் ரூபாய் உங்கள் கணக்கில் வந்திருக்கும். எதற்காக இந்தப் பணம்? நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா உச்சத்தில் இருந்தது. அதைச் சமாளித்து மக்களின் உயிரைக் காத்தது மட்டுமல்ல, அவர்கள் வாழ்வாதாரத்தைக் காக்க 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையையும் வழங்கினோம். சென்ற ஆட்சி விட்டுவிட்டுப் போன கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளித்து,

ஆட்சிக்கு வந்ததுமே பல திட்டங்களை நிறைவேற்றினோம். நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தேன். அப்போது, "இது சாத்தியமே இல்லை" எனச் சிலர் சொன்னார்கள். ஆனாலும், நிதி நெருக்கடியைச் சமாளித்து, ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையையும் மீறி, கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட"த்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். முதலில், ஒரு கோடியே 13 லட்சம் மகளிருக்குப் பயனளித்த இந்தத் திட்டம், அண்மையில் விரிவுபடுத்தப்பட்டு, தற்போது ஒரு கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இது வெறும் நிதியுதவி அல்ல.

சமூகத்தில் பெண்கள் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காகக் கொடுக்கப்படுகிற உரிமைத்தொகை! இந்தத் தொகையை வைத்து, அன்றாட வீட்டுச் செலவுகள், குடும்பத்தில் ஏற்படும் மருத்துவச் செலவுகள், குழந்தைகளுக்கான கல்விச் செலவுகள்,

என, பல அத்தியாவசியச் செலவுகளை, மகளிர் தாங்களே நிறைவு செய்ய இந்த திட்டம் வழிவகுத்தது.

அதனால்தான், ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி என்பது, ஒவ்வொரு குடும்பத்தலைவியும் ஆவலோடு எதிர்பார்க்கும் நாளாக அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகிறார்கள். இந்த உரிமைத் தொகையை மேம்படுத்த வேண்டும் என நாம் செயல்பட்டு வந்தால், அதற்கு எதிராக டெல்லியில் இருக்கும் ஒரு கூட்டமும், தமிழ்நாட்டில் அவர்களுக்கு அடிமையாக இருக்கும் இன்னொரு கூட்டமும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, அடுத்த 3 மாதங்களுக்கு இந்த மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த, சூழ்ச்சி செய்வதாகத் தகவல் வருகிறது! இதுபற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் சிலர் முயற்சி செய்வதாகச் செய்திகள் வருகிறது.

ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் உழைப்பை அங்கீகரிக்கும் இந்த திட்டத்தை 3 மாதம் நிறுத்தி வைத்தால் நீங்கள் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாவீர்கள் என உங்கள் வீட்டில் ஒருவனாக இருக்கும் எனக்கு நன்றாகத் தெரியும். கடும் வெயிலில் வேலைக்குப் போக கடினமான கோடைக்காலத்தில், இந்தத் தொகை நிறுத்தப்பட்டால், உங்களுக்கு எவ்வளவு வலி ஏற்படும் என என்னால் உணர முடிகிறது.

உங்கள் மாதாந்திர செலவை, எப்படி சமாளிப்பீர்கள்? உங்கள் குடும்பத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மாத்திரை வாங்கிக் கொடுக்க முடியுமா? குழந்தைகள் தேர்வு எழுதும் காலத்தில் அவர்களுக்கு உணவு கொடுப்பதில் இருந்து, தேவையான கல்விச் செலவுகளைச் செய்ய முடியுமா? இந்தக் கஷ்டத்தை எல்லாம் நினைத்துப் பார்த்துதான், ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளேன். அதன்படி, இந்த பிப்ரவரி மாதம் மட்டுமில்லாமல் அடுத்த 2 மாசம்… அதாவது மார்ச், ஏப்ரலுக்கான உரிமைத்தொகை தவணைகளையும் சேர்த்து 3 ஆயிரம் ரூபாயும், கூடுதலாகக் கோடைக்காலச் செலவுகளை கருத்தில் கொண்டு மேலும் 2 ஆயிரம் ரூபாய் சிறப்புத் தொகையும் சேர்த்து, இந்த பிப்ரவரி மாசம் 5 ஆயிரம் ரூபாயைச் சிறப்பு மகளிர் உரிமை தொகையாக ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்க உத்தரவிட்டிருக்கேன்.

இந்த தருணத்தில் இன்னொரு அன்பான வேண்டுகோள்: இந்த 5 ஆயிரம் ரூபாயை அடுத்த 3 மாதத்துக்கு நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதால்,

கொஞ்சம் கவனமாகச் செலவிடுங்கள். முடிந்த அளவுக்குச் சேமிக்கவும் பாருங்கள்.

அன்புச் சகோதரிகளே, உங்கள் ஆதரவோடு அடுத்து அமையப் போவதும் திராவிட மாடல் ஆட்சிதான்! அதனால், நீங்கள் மனம் குளிரும் சிறப்பான ஒரு அறிவிப்பையும் இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன். அடுத்த திராவிட மாடல் 2.0 ஆட்சிக் காலத்தில், உங்களின் உரிமைத்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சொன்னால் சொன்னதைச் செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி இது! இதையும் எப்படி செய்வோம் என்று சிலர் கேட்கலாம்!

கடந்த ஆட்சியின் 10 ஆண்டுகளில், தமிழ்நாடு அடைய முடியாத பொருளாதார வளர்ச்சியை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்குச் சாதித்துக் காட்டியவர்கள் நாங்கள்! அதனால், எந்தத் தடை வந்தாலும் அதையெல்லாம் தாண்டி, தமிழ்நாடே வெல்வோம் ஒன்றாக!” இவ்வாறு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.