திமுகவினரை வெளியேற்றியது ஏன்? - சபாநாயகர் விளக்கம்..!
மிசா சட்டம் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதற்கு தி.மு.க சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்த எ.வ.வேலு, ஜனநாயகத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓராண்டு சிறையில் இருந்தார். பெரியாரின் கொள்கையை ஏற்றுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூட அப்போது மு.க.ஸ்டாலினுடன் சிறையில் இருந்தார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்று சர்காரியா கமிஷனே திட்டவட்டமாகக் கூறிவிட்டது. குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லாததால் வழக்கு தொடர முடியாது என்றும் சர்காரியா கமிஷன் தெளிவாகத் தெரிவித்துவிட்டது. நேற்று அவையில் மாறன் குறித்து முதலமைச்சர் விஜய் பேசினார். அவைக்குள் உறுப்பினராக இல்லாத ஒருவரைப் பற்றி அவையில் பேசக் கூடாது என்று சட்டமன்ற விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் ஆதாரம் இன்றி பேசிய கருத்துக்கள் அனைத்தையும் உடனடியாக அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எ.வ.வேலு திட்டவட்டமாக வலியுறுத்தினார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான முதலமைச்சர் விஜயின் பேச்சில் எதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவையில் இல்லாதவர்கள், நீதிமன்றத்தில் உள்ளவை குறித்து முதலமைச்சர் விஜய் நேற்று பேசியதை நீக்க வேண்டும் என தி.மு.க சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
திமுகவினரை வெளியேற்றியது ஏன்? - சபாநாயகர் விளக்கம் :
“பேரவையில் நடைபெறுவதை உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கு யார்? கட்சி ரீதியாக யாருக்கு என்ன பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கிறது? என்பது இன்று தெளிவாக தெரிய வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை எனக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். மருத்துவர்கள் என்னை ஓய்வெடுக்க சொன்னார்கள். அதையும் மீறி முதலமைச்சரின் பதிலுரையின்போது நான் பேரவையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே பேரவைக்கு வந்து அமர்ந்தேன்.
இப்போதும் என் மீது என்ன தவறு இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். திமுகவினரை பேச அனுமதித்தது ஒன்றுதான் குற்றமா? சட்டத்துறை அமைச்சர், அவை முன்னவர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோர் விரிவான பதிலை அளித்தார்கள்.
அவை குறிப்பிலிருந்து முதலமைச்சர் பேசியதை நீக்க முடியாது என்ற காரணத்தை தெளிவாக சொல்லிவிட்டேன். அவர் விதிகளுக்கு புறம்பாக எதையும் பேசவில்லை. விதிகளுக்கு உட்பட்டு தகுந்த ஆதாரங்களை மட்டுமே வெளியிட்டு பேசினார். மூத்த முன்னாள் அமைச்சர்களை கொண்டிருக்கும் ஒரு கட்சி திமுக. சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற மாண்பை தெரிந்த ஒரு கட்சி.
அக்கட்சியின் உறுப்பினர்கள் சபையை நடத்த விடாமல் தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தை மட்டுமே காண்பிப்பதாக அவர்கள் நடவடிக்கை இருந்ததால் அவர்களை வெளியேற்றுங்கள் என்று சொல்வதைத் தவிர வேறு எந்த ஆப்ஷனும் எனக்கு இல்லை. அவையை நடத்த விடாமல் தடுத்தால் நான் என்ன செய்ய முடியும்? இன்று 1.30 மணிக்குள் அவையை முடிக்க வேண்டும் என்று நோக்கத்தில் இருக்கும் பொழுது இந்த அவையை மேற்கொண்டு நடத்த விடாமல் தடுக்க முயற்சி செய்ததுதான் என் உள்ளத்தை வருத்தப்படுத்தியது” என்றார்.
மேலும், “ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமைதி காத்தீர்கள். இதுதான் உங்கள் தலைவர் உங்களுக்கு கற்றுத் தந்திருக்கிற நல்ல பண்பு. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு பாராட்டுகள். நான் திமுகவினரை வெளியேற்றியது சரிதான். எனக்கு அவை மாண்பு தான் முக்கியம். நமக்கு மட்டுமே பதில் சொல்ல வேண்டிய அவையில் நாம் இல்லை. நாட்டு மக்களுக்கும் பதில் சொல்லவேண்டிய அவையில் நாம் இருக்கிறோம். நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள்?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.