'ஏன் போராடணும்? அந்த நேரத்தில் படிக்கலாமே?': நீட் டாப்பர் பன்ஷூல் பன்சல் !
நீட்-யுஜி 2026 மறுதேர்வில் 99.9999 பெர்சென்டைலுடன் அகில இந்திய அளவில் 2-ஆம் இடத்தைப் பிடித்த பன்ஷுல் பன்சால், வினாத்தாள் கசிவின் காரணமாக அசல் தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு, ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதை விட தனது செயல்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்.
என்.டி.டி.விக்கு அவர் அளித்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, "எதற்காக நான் போராட வேண்டும்? மாறாக, வீட்டில் இருந்து படித்தால், என்னுடைய திறன்கள், மதிப்பெண்கள் மேம்படும்.
நீட் தேர்வு ரத்தானதும் முதலில் வருத்தமாக இருந்தது. பின்னர், என் வருத்தத்தை விலக்கிவிட்டு, தேர்வுக்கு தயாராக தொடங்கினேன்.
முன்னர் எடுத்த மதிப்பெண்களைவிட அதிகமாக எடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் படிக்கத் தொடங்கினேன்.
தேர்வு ரத்தானதும், என்னுடைய தினசரி செயல்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை. எதிர்மறையான எண்ணங்களை விலக்கிவிட்டு, நேர்மறையான எண்ணங்களை மட்டும் நினைவில்கொண்டு என்னுடைய இலக்கை நோக்கி பயணித்தேன்." என்று கூறிய பன்சல், தேர்வு முடிந்தவுடன் அது உருவாக்கிய பதட்டம், மனஅழுத்தமும் மறைந்துவிடும் என்கிறார்.