×

மழை இல்லாவிட்டாலும் டெங்கு பரவுவது ஏன்? என்ன செய்ய வேண்டும்? 

 

மழைக்காலங்களில் தேங்கும் தூய்மையான தண்ணீரில் உருவாகும் 'ஏடிஸ்' வகை கொசுக்கள் மூலம் டெங்கு பரவுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக, பருவமழைக்கு முன்னரே டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.


மழை இல்லாத காலங்களிலும் வீடுகளில் சேமித்து வைக்கும் தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிடுவதால் டெங்கு பரவலாம். குடங்கள், வாளிகள், தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் மட்டுமின்றி பூந்தொட்டி அடிப்பகுதி, பழைய டயர்கள், தேங்காய் ஒடுகள் உள்ளிட்டவற்றில் சிறிதளவு தண்ணீர் தேங்கினாலும் கொசுக்கள் பெருகலாம். ஏடிஸ் கொசு முட்டைகள் தண்ணீர் வற்றிய பிறகும் பல மாதங்கள் உயிருடன் இருக்கும். மீண்டும் தண்ணீர் தேங்கும்போது அவை பொரிந்து புழுக்களாகவும், பின்னர் கொசுக்களாகவும் உருவாகும். எனவே, மழை இல்லாத காலங்களிலும் தண்ணீர் தொட்டிகள், குடங்கள், வாளிகள் உள்ளிட்டவற்றை மூடி வைக்க வேண்டும். தண்ணீர் காலியானதும் பாத்திரங்களை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும்.

அதிக காய்ச்சல், தலைவலி, உடல்வலி, தசை மற்றும் மூட்டு வலி, கண்களுக்குப் பின்னால் வலி, வாந்தி போன்றவை டெங்கு அறிகுறிகளாக இருக்கலாம். கடுமையான வயிற்றுவலி, தொடர்ந்து வாந்தி, மூச்சுத்திணறல், மூக்கு அல்லது ஈறுகளில் ரத்தம், வாந்தி அல்லது மலத்தில் ரத்தம், அதிக சோர்வு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும். காய்ச்சல் குறைந்த பிறகும் தீவிர பாதிப்பு ஏற்படலாம் என்பதால், காய்ச்சல் குறைந்துவிட்டது என அலட்சியப்படுத்தாமல் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.