அத்துமீறல்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? - வெற்று வசனம் பேசும் முதல்வர் - அன்புமணி காட்டம்..!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பு உச்சத்தை அடைந்துள்ள நிலையில், எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் ஒரு வெற்று அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஐந்தாண்டு கால ஆட்சியில் அனுபவித்தக் கொடுமைகளால் ஏற்பட்ட வெறுப்பில் திமுகவை மக்கள் தூக்கி வீசிவிட்ட நிலையில், என்ன தான் குட்டிக்கரணம் போட்டாலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பது தான் உண்மையாகும்.
தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மட்டுமின்றி ஆண்களும் கூட சுதந்திரமாக நடமாட முடியாது என்று கூறும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை, கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை, திருவண்ணாமலையில் ஆந்திர இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை,தஞ்சாவூரில் ஆசிரியை கொடூரமாக வெட்டிக்கொலை, இராமேஸ்வரத்தில் 12&ஆம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக் கொலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மாவரம் இளம்பெண் படுகொலை என பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியல் திமுக ஆட்சியில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கஞ்சா போதையில் நடக்கும் குற்றங்கள் எல்லையில்லாமல் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிந்தைய நான்கரை ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 7,500 படுகொலைகள் நடந்துள்ளன. எங்கு திரும்பினாலும் கஞ்சா போதையில் திளைக்கும் மனித மிருகங்கள் எந்தக் கொடூரத்தை வேண்டுமானாலும் அரங்கேற்றும் என்ற அச்சம் நிலவும் நிலையில், அப்பாவி ஆண்களோ, பெண்களோ எவ்வாறு அச்சமின்றி பொதுவெளியில் சுந்தந்திரமாக நடமாட முடியும்?
தமிழ்நாட்டில் இவ்வளவு கொடூரங்கள் நிகழும் நிலையில், இவ்வளவு அத்துமீறல்கள் அரங்கேற்றப்படும் நிலையில் இது குறித்து ஒரு வார்த்தைக் கூட பேச முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுக்கிறார். மாறாக ஜால்ரா சத்தம் மட்டுமே கேட்கும் சூழலை திட்டமிட்டு, கட்டமைத்துக் கொண்டு, மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற பொய்யையே மீண்டும், மீண்டும் கூறிக் கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டுள்ளார். மக்களின் வாழ்க்கையை இருட்டாக்கி விட்டு விடியல் ஆட்சி நடத்துவதாக முதல்-அமைச்சர் ஸ்டாலின் வெற்று வசனம் பேசுகிறார்.
2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில் 13 விழுக்காட்டை மட்டுமே நிறைவேற்றியுள்ள திமுக அரசு, 87% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நிதிநிலை அறிக்கைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 50 விழுக்காட்டை இன்னும் நிறைவேற்றவில்லை. தொழில் முதலீடுகள் தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ரூ.12.16லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 91.80% இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இப்படியாக எந்த வகையில் பார்த்தாலும் திமுக அரசின் செயல்பாட்டு அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் தோல்விகள், தோல்விகள், தோல்விகள் தான் நிறைந்திருக்கிறன.
இந்தத் தோல்விகளையெல்லாம் வெற்று விளம்பரங்கள் மூலம் மறைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான் தினமும் ஒரு திட்டத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அந்தத் திட்டங்களுக்காக ஒரே ஒரு பைசா கூட நிதி ஒதுக்கப்படவில்லை. முதல்-அமைச்சரை அழைத்து கடந்த ஒரு மாதத்தில் அவர் அறிவித்த திட்டங்களைக் கூறும்படி கேட்டால், அவருக்கே அந்தத் திட்டங்களின் பெயர்களை சொல்லத் தெரியாது. முதல்-அமைச்சரின் மனதிலேயே பதியாத போலித் திட்டங்கள் எவ்வாறு மக்களின் மனதில் பதியும்?
செய்யாத சாதனைகளை மக்கள் மனதில் பதியச் செய்வதற்காக மக்களின் வரிப்பணத்தில் ஊடகங்களுக்கு விளம்பரங்களை வாரி இறைக்கிறார். ஓர் ஆங்கில நாளிதழுக்கு ஒரே நாளில் மட்டும் பல கோடி ரூபாய் மதிப்பில் 22 பக்கங்களுக்கு திமுக அரசு விளம்பரங்களை வழங்கியுள்ளது. முதல்-அமைச்சரின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் போர்க்களத்தில் வெற்றியை இழந்து விட்டு மன்னன், கடைசி நேரத்தில் தம்மை காப்பாற்றிக் கொள்வதற்காக தம்மிடமிருக்கும் ஒவ்வொரு பொருளையும் ஆயுதமாக நினைத்து வீசி எறிவதற்கு ஒப்பான செயல் ஆகும். ஆனால், பாவம்... அவர் எறிவது ஆயுதங்கள் அல்ல என்பது கூட அவருக்கு தெரியவில்லை.
திமுக அரசு என்பது மக்களின் கோபம், கொந்தளிப்பு என்ற பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஓட்டைக் கப்பல். அதை கிழிந்த காகிதங்களைக் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒட்டவைக்கப் பார்க்கிறார். அவரது இந்த முயற்சிகள் அனைத்தும் பயனற்று போகும். வரும் தேர்தலில் மக்கள்விரோத திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறியப் போவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.