×

திமுக மட்டும் இந்த வாக்குறுதியை கொடுக்காதது ஏன்?

 

திமுக தலைமையிலான கூட்டணியில் உதயசூரியன் சின்னம் 176 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, சிபிஎம் மற்றும் சிபிஐ தலா 5, ஐயூஎம்எல் 2 என 58 தொகுதிகளில் வெவ்வேறு சின்னத்தில் போட்டியிடுகின்றன. 

மறுமுனையில், எதிர்க்கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் 171 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக நேரடியாக 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது, தமாகா 5 தொகுதிகள் மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு தொகுதி என 33 தொகுதிகளில் தாமரை சின்னம் போட்டியிடுகிறது. பாமக 18, அமமுக 11 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. நாதக 234 தொகுதியில் கரும்பு விவசாயி சின்னத்திலும்; தவெக 234 தொகுதியில் விசில் சின்னத்திலும் போட்டியிட இருக்கின்றன. சசிகலா - ராமதாஸ் கூட்டணியும் ஒரு பக்கம் தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் களமிறங்குகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, திமுக, அதிமுக, நாதக அதன் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. தவெகவும் ஒரு பக்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி உள்ளது. குறிப்பாக, மகளிருக்கு மாதம் வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத்தொகையை திமுகவும் அதிமுகவும் ரூ.2000 ஆக உயர்த்தும் என தெரிவித்துள்ளன, தவெக 60 வயது வரையிலான பெண்களுக்கு ரூ.2,500 வழங்கும் என தெரிவித்திருக்கிறது. மீனவர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஊக்கத்தொகையையும் உயர்த்தி வழங்குவோம் திமுக, அதிமுக தங்களின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளன.

மேலும், ரேசன் அட்டைத்தாரர்கள் அனைவருக்கும் பிரிட்ஜ் இலவசமாக வழங்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. ஆனால், திமுக வருமான வரி செலுத்தாத மகளிருக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இல்லத்தரசி கூப்பன் திட்டம் என்ற இந்த திட்டத்தில், அரசு வழங்கும் கூப்பனைப் பயன்படுத்தி வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி, மின் அடுப்புகள் போன்ற உங்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களை உங்களின் வீட்டின் அருகில் உள்ள கடைகளிலேயே வாங்கிக் கொள்ளலாம். உங்களிடம் உள்ள பொருள்களை மாற்றியும் நீங்கள் புதிய பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாதக இலவசங்களை அறிவிக்காது என வாக்குறுதி அளித்துள்ளது. 

தவெகவின் கவனிக்கத்தக்க வாக்குறுதிகள்

தவெக இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடவில்லை என்றாலும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம்; திருமணமாகும் அனைத்து பெண்களுக்கும் 1 பவுன் தங்கம், பட்டுப்புடவை; பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட பெண்களுக்கான எக்கச்சக்க வாக்குறுதிகளை தவெக தலைவர் விஜய் அளித்துள்ளார். இதனால், யாரின் தேர்தல் அறிக்கை வெற்றியை பெற்றுத் தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இலவச சிலிண்டர் வாக்குறுதிகள்

இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக, இந்தியாவில் எல்பிஜி தட்டுபாடு தலைவிரித்தாடும் நிலையில், வருடத்திற்கு 6 இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என தவெக வாக்குறுதி அளித்திருக்கிறது. அதிமுகவோ 3 சிலிண்டர்களை வழங்குவோம் என வாக்குறுதி அளித்திருக்கிறது. ஆனால், 2021இல் ஆட்சிக்கு வந்தால், ரூ.100 கேஸ் மானியம் வழங்குவோம் என வாக்குறுதி அளித்திருந்த திமுக, இந்த முறை கேஸ் சிலிண்டர் குறித்த எவ்வித வாக்குறுதியையும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. நிச்சயம் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு போட்டிப்போட்டி வாக்குறுதி அளிக்கும் திமுக, எல்பிஜி சிலிண்டர் விவகாரத்தில் மட்டும் சைலண்டாக இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

சென்ற முறை, மாநில அரசின் முழு அதிகாரம் இல்லாத சில வாக்குறுதிகளை கொடுத்தது அதை நிறைவேற்ற சிக்கல் எழுந்தது என்றும், கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும் என அனைத்து தரப்பில் இருந்து கேள்விகள் எழுந்தது என்றும் கூறப்படுகிறது. எனவே, மத்திய அரசின் தலையீடு இல்லாத வகையிலான வாக்குறுதிகளையும், மாநில அரசால் தனிச்சையாக முடிவெடுத்து செயல்படுத்தக்கூடிய வாக்குறுதிகளையும் வழங்கவே இம்முறை திமுக திட்டமிட்டதாக கூறுகின்றனர். எனவேதான், திமுகவின் 2026 தேர்தல் வாக்குறுதியில் நீட் விலக்கு, கேஸ் மானியம், இலவச சிலிண்டர், பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு போன்ற மத்திய அரசு தலையீடு கொண்ட எந்த அறிவிப்பையும் திமுக வெளியிடவில்லை என கூறப்படுகிறது.