பாஜகவில் இருந்து விலகியது ஏன்..? முதல்முறையாக வாய் திறந்த அண்ணாமலை!
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, வீ தி லீடர்ஸ் இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். இந்த இயக்கத்தின் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசிய அண்ணாமலை, பாஜக குறித்தும் மதம் தொடர்பாகவும் சில கருத்துகளை குறிப்பிட்டார்.
பாஜகவில் இருந்து விலகியது குறித்து நான் இங்கு பேச விரும்புகிறேன். இதுவரை அது பற்றி நான் எங்கும் பேசியதில்லை.
பாஜக மீது எனக்கு கோபம் இருந்ததா? ஆம் இருந்தது. ஆனால், அதை பொறுப்புணர்ச்சி உடன் காட்ட வேண்டி இருந்தது. பாஜகவில் இருந்து விலகிய பிறகும் யாரை பற்றியும் 38 நாட்கள் தவறாக பேசவில்லை. அப்போது திமுகவை சேர்ந்தவர்கள் நான் பாஜகவின் பீ டீம் என்றனர். வெளியே வந்து பாஜக பற்றி திட்டினால் தானே வருவார்கள் என்று சிலர் சொன்னார்கள். ஆனால், நான் பழிச்சொல் சொல்லிவிட்டு வெளியே வர மாட்டேன். எங்களுக்கு இன்னொரு பாதை இருக்கிறது. அதில் சென்று மக்களுக்கு நல்லது செய்வோம். அவ்வளவு தான்!
இன்றும் நான் சொல்கிறேன். எனது மதம் இந்து மதம். திருநீறு வைக்கிறேன். குங்குமம் வைக்கிறேன். ஆனால், வீட்டில் இருந்து வெளியே வரும்போதே எனது மதத்தையும் சாதியையும் வீட்டிலேயே பூட்டி வைத்துவிடுவேன். அனைவருக்கும் பொதுவான நபராகவே நான் உங்கள் முன்பு நிற்கிறேன். மதத்தை ஒவ்வொரு முறையும் தூக்கி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. உண்மையான இந்து அனைவரையும் சமமாக பார்ப்பான். அனைவரையும் சமமாகவே நடத்துவான்" என்றார்.
இந்த மாநாட்டில் முதல் தீர்மானம் போதைக்கு எதிராக போடப்பட்டிருக்கிறது.மாவட்டம் தோறும் போதை தடுப்புக்குழு உருவாக்க வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அவர் மேலும் பேசியதாவது "இந்த அமைப்பு மூலமாக தவெக அரசுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது. தற்போது இருப்பவர்களில் நிறையபேர் புது எம்எல்ஏக்கள். செங்கோட்டையனை தவிர மற்ற அனைவரும் புதிய அமைச்சர்கள். அவர்கள் தடுமாறத்தான் செய்வார்கள். எனவே, நல்ல சமூகமாக இருந்தால் நாம் அவர்களை தூக்கி பிடித்துதான் விட வேண்டுமே தவிர கீழே அழுத்த கூடாது.நமக்கு அதிகார வெறி இல்லை. தவெக தடுமாறும் போது.. தூக்கி பிடித்து உதவ வேண்டும். நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம்.
தொடர்ந்து பேசிய அவர், "எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இந்த ஆண்டு தவெக அரசு ரூ.80,000 கோடிக்கும் அதிகமாகத்தான் கடன் வாங்கப்போகிறது. அடுத்த ஆண்டும் இதே நிலைமைதான். இப்படியாக தவெக ஆட்சி முடியும்போது தமிழகத்தின் கடன் ரூ.14-15 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கும்.
இந்த அமைப்பில் 50 லட்சம் பேர் இணையும்போதுதான்.. தமிழ்நாடு நம்மை அழைக்கிறது என்று அர்த்தம். நாம் யாரையும் போர்ஸ் செய்யக்கூடாது. ஒரு பேப்பரை எடுத்துக்கொண்டு போய்.. நாமாக அவர்களை இணைப்பது, மிஸ்டு கால் கொடுக்கிறோம் வாங்க.. அப்படியெல்லாம் கிடையாது. 50 லட்சம் பேர் அவர்களாக இந்த மாற்றத்திற்கு.. நாங்கள் துணை இருப்போம் என்று அவர்கள் வருகிறபோதான் எல்லாம் நடக்கும்.
அடுத்த 6 மாத காலத்திற்கு நம்முடைய இலக்கு தெளிவாக இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழலுக்கான மாதம். 50 லட்சம் மரக்கன்றுகளை நடப்போகிறோம். செப்டம்பர் மாதம் பெண்களின் பாதுகாப்புக்கான இயக்கம். இப்படி 6 மாத காலம்.. 6 முக்கியமான பிரச்சனைகளை எடுத்து.. அடுத்த 6 மாதங்களுக்கு செயல்பட இருக்கிறோம். தனி மனிதனாக நாம் செயல்படும்போது நிச்சயம் மாற்றம் ஏற்படும்.
"Gen Z இளைஞர்களிடம் பேசவே முடியாது. அவர்கள் நினைத்ததை செய்வார்கள் என சொல்கிறார்கள். ஆனால், அப்படி இல்லை. இந்த மேடையில் இருக்கும் அனைவரும் Gen Z தான். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சகோதரியும் Gen Z தான். வீ தி லீடர்ஸ் அமைப்பில் 19 லட்சம் பேர் இருக்கிறார்கள். அதில் 18 வயதில் இருந்து 25 வயது வரை இருப்போர் 14% பேர். 26 வயதில் இருந்து 39 வயது வரை இருப்போர் 40% பேர். இந்த வீ தி லீடர்ஸ் இளைஞர்களை கொண்ட இயக்கம். 39 வயதுக்கு கீழானவர்கள் 53% பேரை கொண்ட இயக்கம். அவர்கள் வாய்ஸ்ஸை நாம் கேட்க வேண்டும். அவர்கள் யோசிப்பது வித்தியாசமாக இருக்கும். சமூகத்தை வித்தியாசமாக பார்க்கிறார்கள். மாற்றம் வேகமாக வேண்டும் என நினைக்கிறார்கள்.
இந்த 39 வயதிற்கு கீழ் இருப்போர் தான் 2026ல் மிக பெரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். 2031ல் அவர்கள் மீண்டும் ஒரு பெரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தான் போகிறார்கள். அதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் தேவையில்லை" என்றார்.