×

மே 4-ல் யாருக்கு வெற்றி? திருமாவளவன் போட்ட மெகா கணக்கு..!

 

தமிழக சட்டமன்றதேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் வரலாறு காணாத வகையில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியது. வருகிற 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. 

இதையொட்டி ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. இதில் பெரும்பாலானவை தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஒரு சில கருத்துக்கணிப்புகள் அ.தி.மு.க. ஆட்சியை கைப்பற்றும் என்றும், ஒரே ஒரு கருத்துக்கணிப்பு த.வெ.க. ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்து இருந்தது. இந்த கருத்துக்கணிப்பு, அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்தநிலையில், விசிக தலைவர் திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விசிக போட்டியிடாத தொகுதிகளில் ஒரு சில இடங்களில் விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை. கூட்டணி கட்சியினருக்கு ஒத்துழைப்பு தரவில்லை என கட்சியினர் மீது புகார் வந்துள்ளது. கூட்டணி கட்சியினருக்கு ஒத்துழைக்காத விசிகவினர் குறித்து தகவல் திரட்டப்படுகிறது. எப்படி கணக்குப் போட்டு பார்த்தாலும் திமுக கூட்டணிதான் பெரும் வெற்றி பெறும். திமுக. அதிமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் பிரித்திருக்கிறார். ஆனால், ஆட்சியை கைப்பற்றும் தனித்த சக்தியாக வலிமை பெற இயலாது. திமுகவை அகற்றிவிட்டு பாஜக அங்கம் வகிக்கும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் விஜய்க்கு கவலையில்லை. பாஜகவை கொள்கை எதிரி என்பதை தவிர விஜய் வேறு எதுவும் சொல்வதில்லை. 

குறிப்பாக நாம் போட்டியிடாத பிற தொகுதிகளில் நம்முடைய தோழமை கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தேர்தல் பணி ஆற்றியதில் ஒரு சில தொகுதிகளில் இருந்து தோழர்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்றவில்லை என்ற என்கிற தகவல்கள் வந்துள்ளன. அது குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. களப்பணி ஆற்றிய அத்தனை தோழர்களுக்கும் என்னுடைய பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டப்பேரவை தேர்தல் என்கிற போது ஒவ்வொரு தேர்தலிலும், பலர் பொதுத்தொகுதிகளில் தங்களுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதும், அப்படி அந்த வாய்ப்பு வழங்கப்படாத நிலை வரும்போது அவர்கள் ஏமாற்றம் அடைவதும் ஒரு தொடர்கதையாக இருக்கிறது. ஆகவே பொதுத்தொகுதிகளில் நாம் வேட்பாளர்களை மாற்றுவது தவிர்க்க முடியாததாக மாறுகிறது. பொதுத்தொகுதிகளில் மட்டுமல்ல மொத்தமாக...

ஏனென்றால் மிக குறைவான இடங்களை நாம் பெறுகிற போது புதிய புதிய ஆட்களுக்கும் நாம் வாய்ப்பு தர வேண்டும் என்கிற ஒரு நிலைப்பாட்டை புறம் தள்ள முடியாது. அந்த கோரிக்கை வலுவாக எழுகிறது. கட்சி வலுப்பெற வலுப்பெற அதிகாரத்தை நோக்கி நகர நகர, முன்னணி பொறுப்பாளர் இடையே போட்டி வலுக்கிறது. 2001ல் நான் தேடி தேடி ஆட்களை பிடித்து போட்டேன். 2006ல் கூட வேட்பாளர்கள் மிக குறைவாகத்தான் நம்மிடத்தில் போட்டி போட்டார்கள். ஆனால் 2011ல் அதிகரித்தது, 2016ல் இன்னும் அதிகரித்தது. 2021ல் ஒரு தொகுதிக்கு 10 பேர் என்கிற அடிப்படையில் போட்டி அதிகரித்தது. புதிய முகங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதை ஒரு நிலைப்பாடாக நாம் எடுக்க வேண்டிய ஒரு கட்டாயம் எழுகிறது. அந்த அடிப்படையில் தான் பொதுத்தொகுதிகளில் வென்ற தம்பி ஷா நவாஸூக்கும் தம்பி எஸ்.எஸ் பாலாஜிக்கும் இந்த முறை நான் வாய்ப்பு தர இயலாமல் போனது. ஆனால் அதற்கு வெவ்வேறு காரணங்களை பலரும் சமூக ஊடகங்களில் எடுத்துச் சொன்னார்கள் விவாதித்தார்கள். அது உண்மையல்ல. அந்த காரணங்கள் எதுவும் உண்மையல்ல” என்று கூறினார். 

இவ்வாறு அவர் கூறினார்.

allowfullscreen