×

யார் சாமி இவன்..? 22 பெண்களை ஏமாற்றி மணந்த கல்யாண ராஜா...அதுவும் 56 வயதில்..!  

 

22 திருமணங்களை செய்து ஒரு மெகா மோசடியை அரங்கேற்றியிருக்கிறார் திருவனந்தபுரத்தை சேர்ந்த பாகுலேயன்தான்.

ஊருக்கு ஒரு பேர், மாவட்டத்திற்கு ஒரு மனைவி, வருடத்திற்கு ஒரு கல்யாணம் என ஹனிமூனிலேயே காலம் கடத்தியிருக்கிறார் இந்த 56 வயதான கேரளத்து கல்யாண மன்னன். பொண்டாட்டிகளுக்கு போண்டா டீ வாங்கிக் கொடுக்கவே வருமானம் பத்தாது என்ற சூழலிலும், திருட்டு நகைகளைப் போட்டு அழகு பார்க்க நினைத்தவர் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் வசமாக சிக்கியது எப்படி?

திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடமிருந்து 7 சவரன் தங்க சங்கிலியை பாகுலேயன் பறித்துச் சென்றுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் ஆற்றிங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். விசாரணையில், திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு பகுதியை சேர்ந்த 56 வயதான பாகுலேயன்தான் திருடியது என்பதை கண்டுபிடித்தனர். அவரை மடக்கிப்பிடித்த போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது மனைவிக்காக நகைப்பறிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். அப்படியானால் உனது மனைவியையும் விசாரிக்க வேண்டும் என போலீஸார் கூறியுள்ளனர்.

அதற்கு எந்த மனைவியை விசாரிக்கப் போகிறீர்கள் என கேட்டுள்ளார். அப்படியானால், உனக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்களா? என போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு அவர் அளித்த பதிலைக் கேட்டு போலீஸாருக்கு பொறி ஏறியிருக்கிறது. மாவட்டத்திற்கு ஒரு மனைவி என 22 மனைவிகள் தனக்கு இருப்பதாக அவர் கூற அங்கிருந்த அனைவரும் திகைத்துப் போயினர்.அதாவது பாகுலேயன் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்த பெண்கள் என கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் ஆதரவு கொடுத்திருக்கிறார். ஒரு ஊரில் சுந்தரம் என்றால், மற்றொரு ஊரில் விஜயன், வேறொரு ஊரில் பாபு என ஊருக்கு ஒரு பெயரை வைத்துக்கொண்டு தனது உருட்டு வேலையை அரங்கேற்றியிருக்கிறார். திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை மொத்தம் 22 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார்.

என்னதான் 22 திருமணங்களை முடித்திருந்தாலும், அனைத்து மனைவிகளுக்கும் நகைகளைப் போட்டு அழகு பார்த்திருக்கிறார் பாகுலேயன். ஆனால், அனைத்துமே திருட்டு நகைகள் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். பூட்டப்பட்டு கிடக்கும் வீடுகள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து தனது கைவரிசையை காட்டியுள்ளார் இந்த அசகாய சூரர். பாகுலேயன் மீது கேரளாவில் 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன என்பது அதன் பிறகுதான் போலீஸாருக்கே தெரியவந்தது.

இதையடுத்து பாகுலேயனை போலீஸார் ஆற்றிங்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டுவந்த பலே பாகுலேயன் 22 பெண்களை மணந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.