யார் இந்த 'சப்பாணி சரவணன்'? டீக்கடைக்கு சென்ற இடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
மதுரை மாவட்டம் சோலை அழகுபுரம் சப்பாணிகோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 50). 'சப்பாணி சரவணன்' என்று அழைக்கப்படும் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில வழக்குகளில் இவர் சிறைக்கும் சென்று வந்துள்ளார். சப்பாணி சரவணன் டீக்கடைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை நேரத்தில், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு டீக்கடைக்கு சரவணன் வந்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த 5 பேர் கொண்ட ஆயுதமேந்திய மர்ம கும்பல், திடீரென சரவணனை நோக்கிப் பாய்ந்தது. அவர்களிடமிருந்து தப்பிக்க சரவணன் நடுரோட்டில் அலறியபடி ஓடியுள்ளார். எனினும், விடாமல் துரத்திய அந்த கும்பல், காவல் நிலையத்திற்கு மிக அருகிலேயே அவரை ஓட ஓட விரட்டி பயங்கரமான கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார், சரவணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.