×

தமிழக முதல்வர் விஜய்யை கவர்ந்த குட்டி போலீஸ் - யார் அந்த குட்டி சிறுவன்..? 

 

சென்னையில் நடைபெற்ற போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு நிகழ்ச்சியில் பதக்கம் பெற்ற காவலர் அதிகாரியின் மகனை கூப்பிட்டு அவரது தந்தையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் விஜய்.


"போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு" என்ற பெயரில் மாநில அளவிலான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் விழா, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


போதை பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை தடுப்பதில் மிகச்சிறப்பாக பணியாற்றியதற்காக 2026-ஆம் ஆண்டிற்கான 'முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்' 15 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதினை பெற்றவர்களில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சந்தீஷ் ஐ.பி.எஸ் அவர்களும் ஒருவர்.
இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக எஸ்.பி சந்தீஷ் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவருடன் வந்திருந்த அவரது 4 வயது மகன் ஷன்முக், காவலர் சீருடை அணிந்து வந்திருந்தான். நிகழ்ச்சியின் போது முதலமைச்சர் விஜயைப் பார்த்த அச்சிறுவன், தானும் மேடைக்குச் செல்வதாக தந்தையிடம் அடம்பிடித்துள்ளான்.

மகனுடன் மேடை ஏறிய எஸ்.பி.சந்தீஷிடம் விசாரித்த முதலமைச்சர் விஜய், அவருடைய மகனை கையில் தூக்கிக் கொண்டார். சில வினாடிகள் சிறுவனிடம் பேசிய அவர், பின்னர் கீழே இறக்கிவிட்டார்.

பின்னர் கீழே இறக்கிவிடப்பட்ட அந்த 4 வயது சிறுவன், மேடையில் நின்றிருந்த மற்ற மூத்த காவல் அதிகாரிகளை போலவே கம்பீரமாக முதலமைச்சர் விஜய்யின் நேர் எதிரில் நின்று சல்யூட் அடித்தான். சிறுவனின் இந்த சுட்டித்தனமான செயலைக் கண்டு நெகிழ்ந்த முதலமைச்சர், முகமலர்ச்சியோடு பதிலுக்குத் தானும் சல்யூட் அடித்தார்.

அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களின் கைதட்டல்களுக்கு இடையே, அந்தச் சிறுவன் மிகுந்த உற்சாகத்துடன் தன் தந்தையுடன் மேடையை விட்டு இறங்கிச் சென்றான். சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் நடந்த இந்த நெகிழ்ச்சியானத் தருணம் அங்கு இருந்த அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/Sf7JUr0YCWU?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Sf7JUr0YCWU/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">