திருப்பரங்குன்றம் மலை ஏற யார் யாருக்குத் தடை? சுகாதாரத்துறை முக்கிய அறிவுறுத்தல்!
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றப்பட உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகளான வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஸ்தானிக பட்டர்களுடன் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆலோசனை நடத்தினர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பரம்பரையாக பூஜை செய்யும் உரிமைபெற்றவர்கள் ஸ்தானிக பட்டர்கள் ஆவர். ஸ்தானிக பட்டர்களுடன் ஓய்வுபெற்ற நீதிபதிகள் நடத்திய ஆலோசனையில் மதுரை கலெக்டர், மாவட்ட எஸ்.பி. உள்ளிடோரும் பங்கேற்றனர்.
தீபம் ஏற்றுவதைக் காண இன்று திருப்பரங்குன்றத்தில் அதிக அளவில் பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை சார்பில் 8 நடமாடும் மருத்துவ குழுக்கள் உள்பட மொத்தம் 16 மருத்துவக் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன.
கூட்ட நெரிசலான பகுதிகளில் விரைந்து செல்வதற்காக 4 இருசக்கர வாகன மருத்துவ குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அவசர மற்றும் மேல் சிகிச்சை தேவைப்பட்டால் பக்தர்களுக்கு உதவுவதற்காக 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வயதானவர்கள், குழந்தைகள், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் கர்பிணிகள் ஆகியோர் மலை ஏறுவதை தவிர்க்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.